Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சை நகரில் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை நகர சபை தலைவி தகவல்

Print PDF

தினத்தந்தி               27.06.2013

தஞ்சை நகரில் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை நகர சபை தலைவி தகவல்


தஞ்சை நகரில் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுக்கப்பட்டுள்ளது என நகர சபை தலைவி சாவித்திரிகோபால் கூறினார்.

நகர சபைக்கூட்டம்

தஞ்சை நகராட்சி கூட்ட அரங்கில் நகர சபைக்கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு நகர சபை தலைவி சாவித்திரிகோபால் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரிடெல்டா மாவட்டங்களில் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்காத வகையில் கடந்த ஆண்டு சம்பா சிறப்பு தொகுப்புத் திட்டங்களை வழங்கி, விவசாயிகளை காப்பாற்றியது போல் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை நடப்பு ஆண்டிலும் காப்பாற்ற செப்டம்பர் மாதம் வரை 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் நீர் ஆதாரத்தில் இருந்து வயலுக்கு நீர் எடுத்து செல்வதற்கு ஏதுவாக ரூ.12 கோடி மதிப்பில் 80 மீட்டர் நீளம், 90 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட பைப்புகள், குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.6 கோடி செலவில் உயிர்உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், தாவர பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை விலை ஏதும் இன்றி இலவசமாக வழங்க ஆணை பிறப்பித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தஞ்சை நகர சபையின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

உறுப்பினர்கள் கருத்து

பின்பு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:–

சண்.ராமநாதன்(தி.மு.க): 40–வது வார்டில் குடிதண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. அதை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக சொன்னீர்கள். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் 12–ந் தேதி வெண்ணாற்றில் தண்ணீர் வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு வராததால் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தலைவி சாவித்திரிகோபால்: நடராஜபுரம் காலனியில் குடிதண்ணீர் குழாயில் ஏற்பட்டிருந்த பழுது நீக்கப்பட்டுள்ளது. தஞ்சை நகரில் குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக தெரியவில்லை. சீராக எல்லா பகுதிகளிலும் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெண்ணாற்றில் தண்ணீர் வரவில்லை என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். இருந்தாலும் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிவக்குமார்(அ.தி.மு.க): எனது 37–வது வார்டில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவு நீர் பொங்கி தெருவில் ஆறாக ஓடுகிறது.

சதாசிவம்(தி.மு.க): மருத்துவக்கல்லூரி சாலையிலும் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவு நீர் பொங்கி சாலையில் ஓடுகிறது.

சாவித்திரிகோபால்: பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சாலை அமைக்க வேண்டும்

கார்த்திகேயன்(தி.மு.க): கொடிக்காலூர் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

அதிகாரி: விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்.

சர்மிளாதேவி(தி.மு.க): 39–வது வார்டில் கல்லூரி வாகனம், பள்ளி வாகனம் அதிக அளவில் செல்வதால் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.

சாவித்திரிகோபால்: 1 வாரத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விளம்பர பலகை

மணிகண்டன்(துணைத் தலைவர்): தற்போது காற்று அதிகமாக வீசுவதால் தனியார் கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் கீழே சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுகிறது. இதனால் நகராட்சி சார்பில் 2 மாதத்திற்கு விளம்பர பலகைகள் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது.

தங்கம்மாள்(அ.தி.மு.க): எனது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி அவரிடம் இருந்து இடத்தை மீட்க வேண்டும். சாவித்திரிகோபால்: நடவடிக்கை எடுக்கப்படும்.

சாமிநாதன்(அ.தி.மு.க): தஞ்சை திலகர் திடல் அருகே மாலை நேர மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் 50 கடைகளுக்கு தேவையான இடவசதி உள்ளது. ஆனால் எல்லோரும் சாலையின் ஓரத்தில் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்வதால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மார்க்கெட்டிற்குள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.