Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகராட்சி பகுதியில் வெறிநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Print PDF

தினத்தந்தி             01.07.2013

மதுரை மாநகராட்சி பகுதியில் வெறிநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தெருநாய்கள்

மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் எழிலரசு, வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

சமீபகாலமாக மதுரை மாநகரில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமானோர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மதுரை மாநகராட்சி கணக்குப்படி 18 ஆயிரத்து 500 தெரு நாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு நாய் பிடிக்கும் வாகனம் மட்டுமே உள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்யவும் ஒரே ஒரு மையம் செல்லூரில் செயல்படுகிறது.

தொற்று நோய்

கருத்தடை செய்வதற்கான செலவை மதுரை மாநகராட்சியும், விலங்குகள் நல வாரியமும் பகிர்ந்து கொள்கின்றன. இருந்த போதிலும், மதுரை மாநகராட்சியில் 6 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 12 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட வேண்டியது உள்ளது. இதற்கு மதுரை மாநகராட்சியில் போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, தெருநாய்களை பிடிக்க கூடுதல் வாகனம் வாங்கவும், கருத்தடை மையத்தை அதிகப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்க வெறிநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடுவதற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஒழிக்க வேண்டும்

இந்த மனு நீதிபதிகள் ராஜேசுவரன், மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர்ரமேஷ்குமார் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:–

மதுரை மாநகராட்சியில் வெறிநாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, வெறிநாய் கடித்து பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வெறிநாய் கடித்து பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் போதிய மருந்து உள்ளதா என்பது குறித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வெறிநாய்களை கொல்ல எந்தவித வழிகாட்டுதலும் இல்லை என்று பிராணிகள் நல வாரியம் கூறி உள்ளது. எனவே, மதுரை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள வெறிநாய்கள் மற்றும் தெருநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 9–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.