Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரையூர், எழுமலை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் ஆய்வு

Print PDF

தினத்தந்தி                  03.07.2013

பேரையூர், எழுமலை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் ஆய்வு
 
பேரையூர், எழுமலை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வீடுகளிலும், அரசு அலுவலகங்களிலும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்னர் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பேரூராட்சி சார்பாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகிய இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று தகவல் கூறப்பட்டது. பேரையூரில் உள்ள 15 வார்டுகளிலும் எந்தெந்த வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி இருக்கிறது என்பதை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பேரூராட்சி பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தால் தான் பேரூராட்சி அங்கீகாரம் கிடைக்கும். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்றால் 15 நாட்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி கூறினார். உடன் பேரூராட்சி தலைவர் கே.கே.குருசாமி இருந்தார்.

எழுமலை பேரூராட்சி

எழுமலை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எம்.ராஜேந்திரன் ஆய்வு செய்தார். மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு நடத்தினார். பஸ் நிலையத்தில் சமுதாயக்கூடம் மற்றும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை பார்வையிட்டபின் மெயின் பஜாரில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பையும் பார்வையிட்டு பொதுமக்களிடம் அது குறித்து விளக்கினார்.

பேரூராட்சி மூலம் பராமரிக்கப்படும் உரப்பூங்கா மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றையும் பேரூராட்சி உதவி இயக்குனர் எம்.ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அவருடன் செயல் அலுவலர் (நிர்வாகம்) இப்ராகிம், எழுமலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், அலுவலர்கள் சென்றனர்.