Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டிட "சீல்' காரணமாக ஸ்ரீரங்கம் மக்கள் பீதி வேண்டாம் : மாநகராட்சி கமிஷனர் விரிவான விளக்கம்

Print PDF

தினமலர்               04.07.2013

கட்டிட "சீல்' காரணமாக ஸ்ரீரங்கம் மக்கள் பீதி வேண்டாம் : மாநகராட்சி கமிஷனர் விரிவான விளக்கம்


திருச்சி: "விதிகளை மீறிய கட்டிடங்களுக்கு "சீல்' வைப்பது தொடர்பாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் அச்சமடைய வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள ஏழு மதில்சுவர்களில், 5,6,7 ஆகிய மதில்சுவர்கள், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளன. கடந்த, 26ம் தேதி இரவு, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் கண்ணன், கமிஷனர் தனபால் மற்றும் மதில்சுவர் சீரமைப்பு கமிட்டியினர் மதில்சுவர்களை பார்வையிட்டனர்.கடந்த, 1957ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி, மதில்சுவருக்கும், கட்டிடங்களுக்கும் இடையே, 10 அடி இடைவெளியும், கட்டிடத்தின் உயரம், 9 மீட்டர் உயரம் மட்டுமே இருக்கவேண்டும்.

ஆனால், மேலச்சித்திரை வீதி கோபுரம் அருகே, மதில்சுவரின் மிக அருகில், "கல்யாண் சதன்' என்ற உயரமான கட்டிடம் கட்டப்பட்டிருந்தது.செயலாளர் கண்ணனின் உத்தரவுப்படி, மாநகராட்சி அதிகாரிகள், விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை பூட்டி, அதிரடியாக "சீல்' வைத்தனர். ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகள், உத்திரவீதிகள், அடையவளஞ்சான் வீதிகளில் மதில்சுவர்களை ஒட்டியே, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன.

இதேபோல, விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு "சீல்' வைப்பது, அதிரடியாக அகற்றுவது போன்ற பணிகள், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விரைவில் நடக்கவுள்ளதாகவும், அதற்கான கணக்கெடுப்புப் பணி நடப்பதாகவும் பரவிய தகவலால் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

கமிஷனர் விளக்கம்: திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள மதில்சுவர்கள் அனைத்தும் புராதன புகழ்வாய்ந்தவை. மதில்சுவர்களையொட்டி அமைக்கப்பட்டுள்ள சில பழைய வீடுகள், கோவில் நிர்வாகத்தின் அனுமதியின்றி மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டு, வணிக நோக்கில் பல குடியிருப்புகள் கொண்ட வீடுகளாக, விதிகளை மீறி கட்டப்படும் முயற்சிகள் நடக்கின்றன.அவ்வாறு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்துக்கு மாநகராட்சி "சீல்' வைத்துள்ளது. இந்த கட்டிடம், கோபுரம், மதில்சுவரை ஒட்டியும் கட்டி வருவதை கண்டு, "இதை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு, மாநகராட்சி சட்டப்பிரிவுகள் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விதிகளை மீறி கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மாநகராட்சி சட்டப்படி, வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கியும் பணிகள் தொடர்ந்து நடந்தன. அதன்பிறகு, நகர் ஊரமைப்பு சட்டப்பிரிவின் கீழ் அறிவிப்பு வழங்கப்பட்டது. கட்டிட உரிமையாளர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே, கட்டிடத்துக்கு "சீல்' வைக்கப்பட்டது.

அதிரடி தொடரும்: வணிக நோக்குடன் இதுபோன்ற அனுமதியில்லாத, விதிமீறலுடன் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு மட்டுமே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்ரீரங்கம் மதில்சுவரை ஓட்டியுள்ள வீடுகள் சம்பந்தமாக மாநகராட்சி எவ்வித கணக்கெடுப்பு பணியும் மேற்கொள்ளவில்லை.

ஏற்கனவே உள்ள பழைய கட்டிடங்களுக்கு இந்த நடவடிக்கை எதுவும் பொருந்தாது. எனவே, மக்கள் யாரும் இதுகுறித்து அச்சமடைய வேண்டாம் எனவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

வரலாற்று சிறப்புமிக்க மதில்சுவர் புராதன கோவில் மதில்சுவர்களை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.