Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை முடிந்த பகுதிகளில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் மேயர் பேச்சு

Print PDF
தினத்தந்தி             05.07.2013

பாதாள சாக்கடை முடிந்த பகுதிகளில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் மேயர் பேச்சு


கோவையில் பாதாள சாக்கடை முடிந்த பகுதிகளில் சாலை பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் மேயர் பேசினார்.

ஆய்வு கூட்டம்


கோவை மாநகராட்சியில் சாலை மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து துறை அலுவலர்க ளுடன் ஆய்வுக் கூட்டம் மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சி, பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைதுறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுசாமி பேசியதாவது–

கோவை மாநகராட்சியில் 466 கி.மீ நீளத்திற்கு போடப்பட்ட பாதாள சாக்கடை பணிகளில் 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. காந்திபுரம் 100 அடி சாலையில் பாலம் கட்டும்போது நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்தினை குறைப்பதற்கு தக்க திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

லட்சுமி மில்ஸ் சந்திப்பில் பாதாள சாக்கடை பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ராமநாதபுரம் முதல் புலியகுளம் வரை உள்ள சாலை, ராமநாதபுரம், சிங்காநல்லூர் சாலையில் சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும்.

திட்ட அறிக்கை

குறிப்பாக திருச்சி சாலை, அவினாசி சாலை மற்றும் இதர முக்கிய சாலைகளில் சாலையின் இரு புறமும் 1 அடி அல்லது 2 அடி மண் பகுதியாக இருந்தால், அப்பகுதியில் இருக்கின்ற மரங்களுக்கு நீர் செல்லுவதற்கு ஏதுவாக வழிமுறையை வைத்து விட்டு ஏனைய பகுதிகளில் தார்ச்சாலை அமைத்தால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எந்த துறையாக இருந்தாலும் என்ன பணி செய்கிறோம் என்பதை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மாநகராட்சியும் பிற துறையில் செய்கிற பணியை தெரிந்து கொள்வதோடு, எத்தகைய நடவடிக்கைளை எடுக்கலாம் என்று தக்க ஆலோசனைகளை வழங்க முடியும்.

போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினருடன் இணைந்து சாலை நெரிசல் மற்றும் போக்குவரத்துத் துறை எளிதாக்குவதற்கு தேவையான திட்ட அறிக்கையை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் லீலாவதி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டல தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், பி.சாவித்திரி, மாநகராட்சி பொறியாளர் சுகுமார் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் முருகேசன் வையாபுரி மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.