Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செல்போன் டவர்களுக்கு உரிமக் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி             12.07.2013

செல்போன் டவர்களுக்கு உரிமக் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள செல்போன் டவர்களுக்கு உரிமக் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பொது இடங்களில் விளம்பரப் பலகைகள் வைத்தால் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ரயில் நிலையப் பகுதி உள்பட எங்கு விளம்பரப் பலகைகள் வைத்தாலும் அதற்கு  உண்டான அனுமதியை மாநகராட்சியில் பெற வேண்டும்; உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதியில் நூற்றுக்கணக்கான செல்போன் டவர்கள் வைக்கப்பட்டுள்ளன. எந்த செல்போன் நிறுவனமும் இதற்கான அனுமதியை மாநகராட்சியில் பெறவில்லை என கூறப்படுகிறது.

செல்போன் டவர்களால் அதிக கதிர்வீச்சு ஏற்பட்டு மனித குலத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதியில் செல்போன் டவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் உரிமக் கட்டணம் வசூலிக்கலாம் என்று கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நிறுவனத்திடமும் உரிமக் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை.

இதற்கிடையில் செல்போன் டவர் அமைக்கப்படும் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆராயவும் மாநகராட்சி தீர்மானித்துள்ளது. செல்போன் டவர்கள் அமைக்கும் போது கட்டடத்தின் உறுதித் தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தத் தேவையான உரிமங்களைப் பெற்றாக வேண்டும் என்று தொலைபேசித் துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதியில் எத்தனை செல்போன் டவர்கள் உள்ளன என்ற விவரம் மாநகராட்சியிடம் இல்லை. விரைவில் கணக்கெடுத்து உரிமக் கட்டணத்தை வசூலிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.