Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

Print PDF

தினமணி              17.07.2013

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார். மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மேயரை நேரில் சந்தித்து குறைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

மாநகராட்சி 1-வது வார்டுக்கு உள்பட்ட சிதம்பரநகர், முத்துமணி நகர் பகுதி மக்கள் மேயரிடம் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் குடிநீர், சாலை வசதி இல்லாமல் உள்ளது. ஒரு அடிபம்பு உள்ளது. அதில் மின் மோட்டார் வைத்து தரும்படி கடந்த 19.2.2013-ல் மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றனர் அவர்கள்.

பாலபாக்யா நகர் மக்கள்:4-வது வார்டுக்கு உள்பட்ட தெற்கு பாலபாக்யா நகர் கிழக்கு 5-வது குறுக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மேயரிடம் அளித்த மனு விவரம், 5-வது குறுக்குத் தெருவுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் போன்றவை சரியாக கிடைக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கிழக்கு 5-வது குறுக்கு தெருவின் பெயரை மற்ற அமைப்பினர் தன்னிச்சையாக மாற்றுவது ஏற்படையதல்ல. மேலும் தெருவின் பெயரை மாற்றினால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்.

எனவே, எங்கள் தெருவை தொடர்ந்து கிழக்கு 5-வது குறுக்குத் தெரு என்றிருக்க அனுமதிக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விரைவில் பூங்கா அமைத்து அதற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும் எனவும், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பூங்காக்களை சென்னையில் உள்ள பூங்காக்களைப்போல அழகுபடுத்த வேண்டும் என, சண்முகசுப்பிரமணியன் என்பவர் மேயரிடம் மனு அளித்தார்.

நிகழ்ச்சியில் 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை மேயர் விஜிலா சத்தியானந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சியின் பணிநியமனக் குழு உறுப்பினர் மணிமாளிகை எம். கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், உதவும் கரங்கள் அமைப்பு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இருசக்கர வாகனங்களுடன் மரக்கன்றுகள் வழங்கும் பணியை மேயர் தொடங்கி வைத்தார். உதவும் கரங்கள் அறக்கட்டளை நிர்வாகி இ. வைரவன் உடனிருந்தார்.