Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூட சத்துணவுகூடங்களில் அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு

Print PDF

தினத்தந்தி              24.07.2013

ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூட சத்துணவுகூடங்களில் அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு

ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் உள்ள சத்துணவு கூடங்களை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

சத்துணவு

அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, உணவு சமைத்து, குழந்தைகளுக்கு பரிமாறும் முன்பு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர், சமையல் பணியாளர்கள் சாப்பிட வேண்டும் என்றும் அரசு ஆலோசனை வழங்கி உள்ளது.

மேலும், சத்துணவு கூடங்கள் சிறந்த கட்டிடங்களில் உள்ளனவா? சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றனவா? போதிய வசதிகள் உள்ளனவா? என்பதை சோதனை செய்து அறிக்கை அளிக்கவும் அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதுபோல் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 16 மாநகராட்சி பள்ளிக்கூடங்களிலும் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தலைமையில் மண்டல உதவி ஆணையாளர்கள் சண்முகவடிவு, அசோக்குமார், ரவிச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆணையாளர் விஜயலட்சுமி, உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

தலைமை ஆசிரியர் சாப்பிட்டார்

முன்னதாக உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் அதே பள்ளிக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுமதி மற்றும் சமையல் பணியாளர்கள் சமையல் முடித்து உணவை சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அதைப்பார்த்த அதிகாரிகள், உணவு தரமாக உள்ளதா? என்று தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் சமையல் அறைக்கு சென்று தயாரிக்கப்பட்ட உணவுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதா என்றும் பார்வையிட்டனர்.

பின்னர் அரசு வழங்கி உள்ள 36 கேள்விகளுக்கு பதில்கள் கேட்டு அறிக்கை தயாரித்தனர். இதுபோல் 16 பள்ளிக்கூடங்களிலும் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினார்கள்.

இதுபற்றி மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி கூறும்போது, ‘மாநகராட்சி பகுதியில் செயல்படும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு கூடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு உணவு சாப்பிடும் முன்னதாக தலைமை ஆசிரியர்கள் சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம்’ என்றார்.