Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 74 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Print PDF

தினமணி              27.07.2013

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 74 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மொத்தம் 74 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி உதவியாளர் நியமித்தல், "அம்மா' உணவகங்களில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துதல், பிளாஸ்டிக் கழிவுகளை அளிப்பவர்களுக்கு தங்கக் காசுகள் அளித்தல் உள்ளிட்ட 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிகளில் கணினி உதவியாளர்: சென்னை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மண்டல மையப் பள்ளிகளில் சம்பள பட்டியல் தயாரிக்கவும், கடிதங்களுக்கு பதில் அளிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு உதவியாக கணினிக் கல்வி பயின்றவர்கள் கணினி உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இதில் 38 மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள், 10 மண்டல மைய பள்ளிகள் என மொத்தம் 80 பள்ளிகளில் 80 கணினி உதவியாளர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 7,000 வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சிப் பள்ளிகளில் பாதுகாப்புப் பணி மேற்கொள்ள காவலர்களை நியமிக்க ஏற்கெனவே உள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தத்தின்படி காவலர்களை நியமிக்க தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இதன்படி, 240 இரவு நேரக் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ. 10,000 ஊதியமாக வழங்கப்படும்.

சமூக நலக்கூடங்களை பாதுகாக்க 162 பேர் உள்பட 216 பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் அளித்தால் தங்கக் காசு: மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்துக் கொடுப்பவர்களுக்கு வார்டுக்கு ஒருவர் என 200 பேருக்கு தலா அரை கிராம் தங்கக் காசுகளும், வார்டுக்கு 5 பேருக்கு தலா ஒரு கைக்கடிகாரமும் வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் முதல் மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ. 18 லட்சம் செலவாகும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 1,065 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல், கொலைகாரன்பேட்டை பகுதியின் பெயரை மாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்களும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் என்.எல்.சி. நிறுவன பங்குகளை தமிழக அரசே வாங்கும் என்று அறிவித்ததற்கும், காவிரி ஆற்றுப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்க தடை விதித்ததற்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்லூரி கட்டணங்கள் முழுமையாக வழங்க உத்தரவிட்டதற்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய தீர்மானங்கள்...

குப்பையில் இருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், பிளாஸ்டிக் குப்பைகள் வழங்குவோருக்கு தங்கக் காசுகள், கைக் கடிகாரங்கள் வழங்கப்படும்.

ம்பத்தூர் ரயில்வே கிராசிங் எண் 6-க்கு பதிலாக புதிய பாதசாரிகள் சுரங்கப் பாதை கட்டப்படும்.

பிராட்வே பகுதியில் அடுக்குமாடி தானியங்கி வாகன நிறுத்துமிடம் கட்ட அளிக்கப்பட்டிருந்த பணியாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 1,065 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் 80 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

"அம்மா' உணவகங்களில் 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஓர் உணவகத்தில் தலா 3 கேமராக்கள் பொருத்தப்படும்.

பழைய வாகனங்களுக்கு பதிலாக 40 கனரக டிப்பர் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.

ராயப்பேட்டை பகுதியில் உள்ள கொலைகாரன்பேட்டை பகுதியின் பெயர் மாற்றப்படும்.