Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்போரிடம் கையெழுத்து பெற வேண்டும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக தருபவர்களுக்கு தங்க நாணயம் மன்ற கூட்டத்தில் மேயர் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி             27.07.2013

துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்போரிடம் கையெழுத்து பெற வேண்டும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக தருபவர்களுக்கு தங்க நாணயம் மன்ற கூட்டத்தில் மேயர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள், தெருக்களில் குடியிருப்பவர்களிடம் இருந்து கையெழுத்து பெற வேண்டும். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் நேரடியாக மாநகராட்சியிடம் தருபவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

மாநகராட்சி பணிகள் தேக்கநிலை

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது, மாநகராட்சியின் துப்புரவு பணி தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால் மாநகராட்சி பணிகள் தேக்கநிலை ஏற்பட்டு வருகின்றது. எனவே துப்புரவு மற்றும் சுகாதாரப்பணியை மேற்கொள்ள மாநகராட்சி மூலம் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்களா? என்று 12–வது வார்டு மன்ற உறுப்பினர் ஆர்.வி.தன்ராஜ் கேள்வி எழுப்பினார்.

5 வீடுகளில் கையெழுத்து

இதற்கு மேயர் சைதை துரைசாமி பதில் கூறும்போது, தேவைப்படும்போது, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஊழியர்கள் பணியமர்த்த உரிய ஒப்புதல் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை கண்காணிக்க புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஒரு தெருவை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த உடன் அந்த தெருவில் உள்ள 5 வீடுகளில் குடியிருப்பவர்களிடம் கையெழுத்து மற்றும் செல்போன் எண்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இதனை சம்பந்தபட்ட மாநகராட்சி அதிகாரிகள் சரிதானா? என்று ஆய்வு செய்தபின் அந்த பணியாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டால் உறுப்பினர் கூறும் புகார் முற்றிலும் களையப்படும் என்று கூறினார்.

பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்படுமா?

இதே போன்று 91–வது வார்டு மன்ற உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் தனது கேள்வி நேரத்தின்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரானுக்கு குறைவான மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கு மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மேலும் இவற்றை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதை தடை செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து மேயர் சைதை துரைசாமி கூறும்போது, சென்னை மாநகராட்சியில் 40 மைக்ரானுக்கு குறைவான மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை குப்பையிலிருந்து தனித்து பெறுவதற்கு எல்லா வார்டுகளிலும் தனியாக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இம்முறையில் தினசரி 1.70 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்து எடுக்கப்படுகிறது.

½ கிராம் தங்க நாணயம் பரிசு

தினசரி உருவாகும் குப்பையில் இருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக 48 மெட்ரிக் டன் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. எனவே அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுத்து சென்னை மாநகராட்சியிடம் வழங்கும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒவ்வொரு வார்டுக்கும் ½ கிராம் தங்க நாணயம் மற்றும் அடுத்த 5 நபர்களுக்கு கைக்கடிகாரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

சட்டப்பூர்வ ஆய்வு

இதன்படி, மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக கொண்டு வந்து தரும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு கிலோவுக்கும், எண் இலக்கத்துடன் ஒரு டோக்கன் வழங்கப்படும். இதில் ஒவ்வொரு வார்டிலும் அதிக டோக்கன் பெறும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மூலம் உரிய சட்டப்பூர்வ ஆய்வு செய்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.