Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம

Print PDF
தினமலர்        26.07.2013

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம


கோவை:கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கடைகளின் ஆக்கிரமிப்புகளையும், அனுமதியற்ற கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. பஸ் ஸ்டாண்டில் இருந்த 11 கடைகளில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பும், வெளியில் இருந்த 10 கடைகளின் ஆக்கிரமிப்பையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் இருந்த டீ கடையை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் முயன்றபோது, அ.தி.மு.க., கவுன்சிலர் சீதாராமன்; அங்கு வந்து "கட்சிக்காரர் கடை, கொஞ்சம் தயவு காட்டுங்கள்' என, கூறினார். "ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் பார்க்க முடியாது, அனைத்து ஆக்கிரமிப்புகளும் கட்டாயம் அகற்றப்படும்' என, மாநகராட்சி கமிஷனர் லதா கூறினார். இதையடுத்து, இரும்பு பெட்டி டீக்கடைக்காரர் தானே அகற்றிக்கொண்டார்.

பஸ் ஸ்டாண்டில் செயல்படும் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்தம் இடத்தில், எட்டு மணி நேரத்திற்கு ரூ. 10 வசூலிப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையில், 24 மணி நேரத்திற்கு சைக்கிளுக்கு ரூ. 2, டூவீலர்களுக்கு ரூ. 5 வசூலிக்க வேண்டும்; எனவே, ஒப்பந்ததாருக்கு அபராதம் விதிக்கவும், தொடர் நடவடிக்கை உத்தரவிடப்பட்டது. கட்டண கழிப்பிடங்களில் சிறுநீர், மலம் கழிக்க ஒரு ரூபாயும், குளியலுக்கு ரூ. 3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், "அது'க்கு 5 ரூபாய், குளியலுக்கு 10 ரூபாய் என, கூடுதலாக கட்டணம் வசூலித்ததால், ஒப்பந்ததாரர் முனியாண்டிக்கு 17,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சத்து 42,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு கழிப்பிட நுழைவாயிலில் ஒட்டப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது :

பஸ் ஸ்டாண்ட் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதற்காகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருப்பதற்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு வராதவாறு தொடர் கண்காணிப்பு இருக்கும். பஸ்ஸ்டாண்டில் சேதமடைந்த இருக்கைகள், நடைபாதை, மின் விளக்குகள் பராமரிக்கப்படும். மாதம் ஒரு முறை பஸ் ஸ்டாண்ட் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும், என்றார்.