Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றும் ஆசிரியர்கள்

Print PDF

மாலை மலர்              31.07.2013

சென்னை மாநகராட்சி பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றும் ஆசிரியர்கள்

சென்னை மாநகராட்சி பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றும் ஆசிரியர்கள்

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 122 துவக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2000–க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதில் 1995–ம் ஆண்டு முதல் 2000–ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இதற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்வித்தகுதியாகும்.

ஆனால் அப்போது பணி நியமனம் பெற்றவர்கள் பலர் முறையான ஆசிரியர் பயிற்சி பெறாமல் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்து இருப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இது குறித்து மாநகராட்சி கல்வித் துறை கவனத்திற்கு வந்ததும் விரிவான விசாரணை நடத்த விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், சிலர் கொடுத்த சான்றிதழ்களில் பயிற்சி பெற்றவர்கள் வெளி இடத்தில் பணிபுரிந்து வருவதும் பெயர் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. எத்தனை பேர் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளனர் என்ற முழு விவரம் இன்னும் தெரியவில்லை.

மோசடி புகார் பட்டியலில் 51 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியராக பணிபுரிபவர்களின் உறவினர்களும் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பதாக கூறப்பட்டாலும் 28 பேர் மட்டுமே இதுவரையில் முறைகேடு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கல்வி சான்றிதழ் நகல்களை அரசு தேர்வுத் துறையிடம் கொடுத்து அவற்றின் உண்மை தன்மை அறியும் பணி நடந்து வருகிறது. ஒரிஜினல் சான்றிதழ் இருந்தால் விரைவாக இந்த பணியை முடிக்கலாம் என தேர்வுத்துறை கூறியுள்ளதால் சந்தேகப்படக் கூடிய ஆசிரியர்களிடம் ஒரிஜினல் சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரிஜினல் சான்றிதழுடன் ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி கல்வித்துறை மோசடியில் சிக்கியுள்ள ஆசிரியர்களிடம் சான்றிதழ் வாங்கிய பின்னர் இந்த போலி சான்றிதழ் விவகாரத்தில் எத்தனை பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

அதனை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும். கடந்த ஒரு ஆண்டாக நடந்து வரும் இந்த பிரச்சினையை விரைவாக முடிக்க மாநகராட்சி கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.