Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் முதல்கட்டமாக 16 வார்டு துப்புரவு பணி தனியார்மயம் கூடுதலாக 273 பணியாளர் நியமிக்க நடவடிக்கை

Print PDF

தினகரன்              05.08.2013

மாநகராட்சியில் முதல்கட்டமாக 16 வார்டு துப்புரவு பணி தனியார்மயம் கூடுதலாக 273 பணியாளர் நியமிக்க நடவடிக்கை

ஈரோடு:  ஈரோடு மாநகராட்சியில் முதல் கட்டமாக 16 வார்டுகளில் துப்புரவு பணிகள் தனியாருக்கு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 273 துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.  ஈரோடு மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டு 60 வார்டுகளுடன் 109.62 சதுர கி.மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தினசரி 350 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என இரு வகைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குப்பைகள் அனைத்தும் மாநகராட்சிக்கு சொந்தமான வெண்டிபாளையம், வைராபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகளில் இருந்து உரமும், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு பிளாஸ்டிக் தார்ச் சாலை அமைக்க தேவையான மூலப்பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை 1,393 துப்புரவு பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்பட வேண்டும். தற்போது 734 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.

இதனால் 662 துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் அதிகமாக சேர்ந்து அதை அகற்ற முடியாத நிலை இருந்து வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் சுயஉதவி குழுக்கள் மூலமாக 389 பேர் நியமிக்கப்பட்டு துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இன்னும் கூடுதலாக 273 துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கிடையில், முதல் கட்டமாக ஒவ்வொரு மண்டலத்திலும் 4 வார்டுகள் வீதம் 16 வார்டுகளை துப்புரவு பணியை தனியாருக்கு விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி 1வது மண்டலத்தில் 2, 3, 6, 8 ஆகிய வார்டுகளும், 2வது மண்டலத்தில் 17, 26, 28, 30 ஆகிய வார்டுகளும், 3வது மண்டலத்தில் 31, 33, 34 ஆகிய வார்டுகளும், 4வது மண்டலத்தில் 46, 50, 55, 56 ஆகிய வார்டுகள் தனியார் மூலமாக துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்த வார்டுகள் தனியாருக்கு டெண்டர் விடப்படவுள்ள நிலையில், கூடுதலாக 273 துப்புரவு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இவர்கள் 273 பேருக்கும் மாதந்தோறும் 29 லட்சத்து 56 ஆயிரத்து 590 ரூபாய் ஊதியம், ஈபிஎப், ஈஎஸ்ஐ, சர்வீஸ்டேக்ஸ், நிர்வாக கட்டணம் ஆகியவற்றிற்கு செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியில் 24 துப்புரவு பணி மேற்பார்வை பணியிடங்களில் 12 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களையும் நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

Last Updated on Monday, 05 August 2013 11:45