Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடலூர் பஸ் நிலைய கடைகளுக்கு சீல் வைப்பு : ரூ.1.25 கோடி வாடகை பாக்கியால் நகராட்சி சீல் வைப்பு நடவடிக்கை

Print PDF

தினமலர்                20.08.2013

கடலூர் பஸ் நிலைய கடைகளுக்கு சீல் வைப்பு : ரூ.1.25 கோடி வாடகை பாக்கியால் நகராட்சி சீல் வைப்பு நடவடிக்கை

கடலூர்:கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 23 கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டதால் பஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் பஸ் நிலையத்தில் 80 கடைகளுக்கும் மேல் உள்ளன. இவற்றில் 74 கடைகள் வாடகை பாக்கி செலுத்துவதில்லை. இதில், அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மேலும், குறைந்தபட்சமாக 3 மாதங்களாக வாடகை செலுத்தாதவர்களால் 1.25 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளது.பெரும் தொகை வாடகை பாக்கியுள்ளதால், நகராட்சிக்கு வருவாய் இல்லாததால் துப்புரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது.வாடகை பிரச்னைத் தொடர்பாக கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதில் வாடகை செலுத்தாமல் உள்ளவர்கள் குறிப்பிட்ட தொகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இருந்தும் பெரும்பான்மையான கடைகள் வாடகை பாக்கியை செலுத்தாமல் காலம் கடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக நகராட்சி நிர்வாகம், வாடகை பணம் செலுத்தா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் கொடுத்தனர்.இறுதியாக வாடகை பணம் செலுத்தாவிட்டால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. இருந்தும் வாடகை பாக்கி கட்டாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.அதன்படி நேற்று நகராட்சி கமிஷனர் காளிமுத்து, நகர் நல அலுவலர் குமரகுருபரன், நகரமைப்பு அலுவலர் முரளி, நகராட்சி மேலாளர் முருகேஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகராட்சி அலுவலர்கள், ஊழியர்களும், 25க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களும் நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை சீல் வைக்க அதிரடியாக களத்தில் இறங்கினர்.

சீல் வைப்பு நடவடிக்கையில் இறங்கிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர் உள்பட 50க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து அதிகபட்சமாக 5வது எண் கடையின் உரிமையாளர் சந்திரா என்பவர் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்த கடை, குறைந்த பட்சம் 55 ஆயிரம் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் வரை மொத்தம் 23 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.இந்த அதிரடி சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.அதிரடியாக அதிகாரிகள்ஆடிப்போன வியாபாரிகள்கடலூர் நகராட்சி நேற்று வாடகை வசூல் செய்யச் சென்ற போது, வழக்கம் போல் மிரட்டல்தான் என பஸ் நிலைய வியாபாரிகள் அசால்டாக இருந்தனர். ஆனால், அதிகாரிகள் சீல் வைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதும், ஆடிப்போய் விட்டனர்.

இதில் சிலர் உடனடியாக பணத்தை செலுத்துகிறேன் எனக் கூறினர். அவர்களிடம், அலுவலகத்திற்கு சென்று பாக்கியை செலுத்துங்கள். அதன் பிறகு கடை திறந்து விடப்படும் என தெரிவித்து விட்டனர். நகராட்சி நிர்வாகம் வாடகை கடைகளுக்கு பூட்டி சீல்வைத்தாலும், கொஞ்சம் கூட அசராமல் ஒரு சிலர் கடைக்கு முன் மேஜைகளைப் போட்டு நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரத்தை கவனித்ததுதான் கொடுமையிலும் கொடுமை.