Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது ஒதுக்கீடு இடம் ஆக்கிரமிப்பு: கோவை மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்

Print PDF

தினத்தந்தி            24.08.2013 

பொது ஒதுக்கீடு இடம் ஆக்கிரமிப்பு: கோவை மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்

கோவை ராமநாதபுரம் பகுதியில் பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் லதா விளக்கம் அளித்துள்ளார்.

ஆணையாளர் விளக்கம்

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் நகரளவு எண் 4189 டி.எஸ்.பிளாக் 42, டி.எஸ்.வார்டு ஜே (10) நேரு நகர் அங்கண்ணன் லே-அவுட் 80 அடி சாலை மேற்கு பகுதி ராமநாதபுரம் பகுதியில் நகர் ஊரமைப்பு துறையால் மனைப்பிரிவு அங்கீகாரம் செய்யப்பட்டு பொது ஒதுக்கீடு இடம் 28 சென்ட் (1138 சதுர மீட்டர் பரப்பளவு) கோவை மாநகராட்சிக்கு சொந்தமானதாகும்.

மேற்கண்ட 1138 சதுர மீட்டர் பரப்பளவு பொது ஒதுக்கீடு இடம் அரசு நகரளவை ஆவணங்களின்படி கோவை மாநகராட்சி ஆணையரின் பெயரில் நில உரிமை பதிவுகள் உள்ளது.

தள்ளுபடி

ஆர்.எம்.பழனிச்சாமி என்பவர் கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு எதிராக மேற்கண்ட பொது ஒதுக்கீடு இடம் தனக்கு சொந்தமானது என்று உத்தரவிடும்படியும் பொது ஒதுக்கீடு இடம் என வரையறை செய்யக்கூடாது எனவும் மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கில் கோவை மாநகராட்சி தரப்பில் அனைத்து ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து வாதாடப்பட்டது. நேரடி சாட்சியமும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

மாவட்ட முன்சீப் நீதிமன்றம் 30.4.2013 அன்று அளித்த தீர்ப்பில் மேற்கண்ட மனுதாரரின் வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் மனுதாரருக்கு தடை உத்தரவு வழங்க இயலாது என்று தீர்ப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான மேற்கண்ட பொது இடத்தில் ஆக்கிரமிப்புதாரரால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தடுத்து நிறுத்தி, கோவை மாநகராட்சிக்கு சொந்தமானது என்று பெயர் பலகை அமைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்பதற்கு வரிவிதிப்பினை ரத்து செய்யவும், குடிநீர் இணைப்பு எண் 91392-யை துண்டிப்பு செய்யவும் மின் இணைப்பு எண் 936/என் டி துண்டிப்பு செய்யவும் ஆக்கிரமிப்புதாரர் மீது நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு உதவி ஆணையாளர்(மத்திய மண்டலம்) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகார்

கோவை மாநகராட்சி சார்பில் காவல்துறை ஆய்வாளர் நில அபகரிப்பு தடுப்பு துறைக்கு 30.7.2013-ல் ஆக்கிரமிப்புதாரர் தனபால் மற்றும் ஆர்.எம்.பழனிச்சாமி மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர், துணை ஆணையாளர்கோவை மாநகர காவல் மற்றும் காவல் துறை ஆணையாளருக்கு புகார் கடித நகல் 30.7.2013-ல் சமர்ப்பிக்கப்பட்டு உரிய ஒப்புகை பெறப்பட்டுள்ளது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கோவை மாநகர காவல் துறையிடமிருந்து நடவடிக்கை விவரம் நாளது தேதி வரை எதுவும் பெறப்படவில்லை.

கோவை ராமநாதபுரம் தமிழ்நாடு மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளருக்கு 30.7.2013-ல் ஆக்கிரமிப்புதாரருக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு எண் 936/என் டி துண்டிப்பு செய்யும்படி மாநகராட்சியின் மூலம் கடிதம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாளது வரை துண்டிப்பு நடவடிக்கை விவரம் எதுவும் இந்த அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பெறப்படவில்லை.

வழக்கு

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனபால் என்பவர் கட்டிடம் கட்டுவதை மாநகராட்சியால் தடை செய்தும் அந்த இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் சார்பில் ஆக்கிரமிப்புதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.எம்.பழனிச்சாமி என்பவர் மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டதை மறைத்து மீண்டும் ஆணையாளருக்கு எதிராக நடவடிக்கைக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து இடைக்கால தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இறுதி தீர்ப்பு

மேற்கண்ட வழக்கில் ‘ஸ்டேட்டஸ் கோ’ நிலை நிறுத்தும்படி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக மாநகராட்சி வக்கீல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கோவை மாநகராட்சி தரப்பில் அனைத்து ஆவணங்களுடன் எதிர்வாத உரை தாக்கல் செய்து 21.8.2013-ல் வாதிடப்பட்டது. மாநகராட்சி வக்கீல் மேற்கண்ட வழக்கு 27.8.2013 அன்று இறுதி தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது என்பதை தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியது மட்டுமல்லாமல்,வேண்டுமென்று பொய்யான தகவலினை அளித்து மனுதாரர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.