Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி            26.08.2013

மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை

விருதுநகர் நகராட்சியில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மணி தெரிவித்தார்.

   விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மா. சாந்தி தலைமையில்  நடைபெற்றது. ஆணையாளர் மணி துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: நகராட்சி விநியோகிக்கும் குடிநீரை சிலர்  மோட்டார் வைத்து எடுத்து வருகின்றனர். இதனால் எல்லாப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் கிடைப்பது இல்லை. 15,16 ஆகிய வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பை 18ஆவது வார்டுக்கும் சேர்த்து கொடுத்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட இடத்தை பொறியாளர்கள் நேரில் பார்த்த பிறகு திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். நடுநிலைப்பள்ளியில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில், இரு வகுப்பறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது கவனிக்கப்பட்டதா? என்று கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

  மேலும் பிரசவ மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மருத்துவர்கள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. கட்டில்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே விரைவில் மருத்துவர் நியமிக்கப்படவேண்டும். கட்டில்கள் மாற்றப்பட வேண்டும்.பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக பெண்கள் குழந்தைகளுடன் வந்து காத்திருக்கின்றனர். இச்சான்றிதழ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  பயன்படாமல் உள்ள நகராட்சி வாகனங்களை ஏலம் விட வேண்டும். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு அதைப் பெற்றதற்கான ரசீது வழங்க வேண்டும்.

    பழைய பஸ் நிலையத்தில் உள்ளே, வெளியே செல்லும் வழிகள் குறுகியதாக இருப்பதால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே அப்பாதையை அகலப்படுத்த வேண்டும்  என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    தலைவர் மா.சாந்தி: வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் பகுதியில் நேரடியாகச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே  திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.

   பிரசவ மருத்துவமனைக்கு விரைவில் மருத்துவரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிறப்பு- இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்தில் கணிப்பொறி பழுதாக உள்ளது. இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது உடனடியாக சரி செய்யப்படும்.

ஆணையாளர் மணி: குடிநீரை  மோட்டார் வைத்து எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடிநீர் விநியோகம் சீராக்கப்படும்.

  பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ரசீது வழங்குவதற்கு தகவல் மையம் தொடங்கப்படும். சில பிரச்னைகளால் நகராட்சி வாகனங்களை ஏலம் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வரவு- செலவு திட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.