Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழிவுநீர் வாகனங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய, உரிமம் திருச்சி மாநகராட்சி அதிரடி முடிவு

Print PDF

தினமலர்              27.08.2013

கழிவுநீர் வாகனங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய, உரிமம் திருச்சி மாநகராட்சி அதிரடி முடிவு

திருச்சி: திருச்சி மாநகர பகுதிகளில், 35 சதவீதம் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 65 சதவீத பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என, அனைத்து வகையான கழிப்பிடங்களிலும் செப்டிக் டேங்க் முறையே பயன்பாட்டில் உள்ளது. செப்டிக் டேங்க்களில் சேகரிக்கப்படும், கழிவு நீர், மாநகராட்சி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுநீரை வெளியேற்ற, பெரும்பாலும் தனியார் வாகனங்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. தேவை அதிகரிப்பு காரணமாக, தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கழிவு நீர் வாகனங்கள் இயங்கி வருகிறது.

ஏற்கனவே வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை, கழிவுநீர் வாகனமாக மாற்றி விடுவதால், வாகனங்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டதுள்ளது.

தனியார் கழிவுநீர் வாகனங்கள் செயல்பாட்டில், அவ்வப்போது பொதுமக்கள் தரப்பில் இருந்து அதிக புகார் வந்தது. கழிவு நீரை இரவு நேரங்களில், குடியிருப்பு பகுதிகளில் திறந்து விடுவது, பகல் நேரத்தில் சுற்றுபுற மக்களுக்கு இடையூறு தரும் வகையில், கழிவு நீரை செப்டிக் டேங்கில் இருந்து வெளியேற்றுவதாகவும் புகார்கள் வந்தது.

மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை வெளியேற்றாமல், இஷ்டப்பட்ட இடங்களில் உள்ள திறந்தவெளி சாக்கடைகளில், காலி நிலங்களிலும் வெளியேற்றுவதால், நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கிறது.

மேலும் வீடுகளில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் போது, 50 சதவீத பணிகள் முடிந்த பிறகு, கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வது, மறுத்தால் பணியை முழுமையாக முடிக்காமல், அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுவது போன்ற செயல்கள் நடந்து வந்தது. தொடர் புகார்கள் காரணமாக, தனியார் கழிவுநீர் வாகனங்களை முறைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி தனியார் கழிவுநீர் வாகனங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய, உரிமம் வழங்கப்படவுள்ளது. உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டுமே, மாநகராட்சி எல்லைக்குள் இயக்க முடியும். ஆண்டுக்கு, இரண்டாயிரம் ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும்.

பஞ்சப்பூர் கழிவுநீர் பண்ணையில், கழிவுநீரை விடுவதற்கு ஒரு நடைக்கு, 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதி இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு, முதன்முறை, 5,000 ரூபாய் அபராதமும், 3 முறை அனுமதி இல்லாமல் இயங்கி பிடிபடும் வாகனங்களை, பறிமுதல் செய்யவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன் ஆரம்பமாக, தற்போது மாநகரில் இயங்கும் தனியார் கழிவு நீர் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியில், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.