Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபியில் அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி            28.08.2013

கோபியில் அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

 

 

 

 

 

கோபியில் அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் ரேவதிதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகராட்சி கூட்டம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டம் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, நகராட்சி தலைவர் ரேவதிதேவி தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) கிருஷ்ணக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:–

மாரிச்சாமி (அ.தி.மு.க.):– கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?.

ரேவதிதேவி (தலைவர்):– நாய்களை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சியின் சார்பில் நாய் பிடிக்கும் வேன் ஒன்று வாங்கப்பட்டு உள்ளது. இந்த வேனின் மூலம் வாரத்தில் 2 நாட்கள் நாய்கள் பிடிக்கப்பட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படும்.

அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம்

செல்வராஜ் (துணைத்தலைவர்):– கோபி–சத்தியமங்கலம் ரோட்டில் அடிக்கடி குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்படுகிறது. இதனால், தண்ணீர் வீணாகிறது. எனவே, குடிநீர் குழாய் உடைப்புகள் எப்போது சரி செய்யப்படும்.

தலைவர்:– குடிநீர் குழாய்கள் உடைப்பு விரைவில் சரி செய்யப்படும்.

பெரியசாமி (அ.தி.மு.க.):– கோபிசெட்டிபாளையம் பஸ்நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுவர்களில் அனுமதியில்லாமல் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்து வருகிறார்கள். அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்பவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படுமா?.

தலைவர்– பஸ்நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான சுவர்களில் அரசியல் கட்சியினரின் சார்பில் எழுதப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்படும். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

சாமிநாதன் (ம.தி.மு.க.):– கோபி நகராட்சியில் நில அளவை செய்வதற்காக சர்வேயர்களிடம் மனுக் கொடுத்தால் அளவீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

தலைவர்:– இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

ராஜேந்திரகுமார் (தி.மு.க.):– எங்கள் வார்டில் நடைபெற்று வந்த சில வளர்ச்சித்திட்ட பணிகள் பாதியில் நின்று விட்டது. நிறுத்தப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் மீண்டும் எப்போது தொடங்கும்?.

தலைவர்:– மணல் தட்டுப்பாடு காரணமாக வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. நிறுத்தப்பட்டு உள்ள பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு இருந்த 22 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் சுகாதார அதிகாரி ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.