Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எலும்பு மற்றும் மூட்டுவலி நோய்க்கு மருத்துவமனை: ஆயுர்வேத சிகிச்சைக்கு மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர்              30.08.2013

எலும்பு மற்றும் மூட்டுவலி நோய்க்கு மருத்துவமனை: ஆயுர்வேத சிகிச்சைக்கு மாநகராட்சி திட்டம்

கோவை : மாநிலத்தில் முதல் முறையாக, எலும்பு மற்றும் மூட்டுவலி சிகிச்சைக்கு ஆயுர்வேத மருத்துவமனை துவங்க கோவை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் 16 லட்சம் மக்கள் தொகையுள்ளது. மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனை இருந்தாலும், மாநகராட்சி சார்பில் (பழைய 72 வார்டுகளில்) 20 மகப்பேறு மருத்துவமனைகளும், 16 மருந்தகங்களும் உள்ளன. இதில், ஆறு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறப்பட்டுள்ளது.

மாநகராட்சி மருத்துவமனைகளில், கர்ப்பகால கவனிப்பு, பிரசவம், குழந்தை நலம், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. எச்.ஐ.வி., பரிசோதனை, பால்வினை நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள், தோல் நோய் மற்றும் தொற்று நோய் சிகிச்சை வசதிகள் உள்ளன.

மருந்தகங்களில் பொது மருத்துவ சிகிச்சை, மகப்பேறு மருத்துவமனைகளில் ஸ்கேன் பரிசோதனை வசதிகளும் உள்ளன. இதுதவிர, மாநகராட்சியில் மூன்று ஆயுர்வேத மருத்துவமனைகள் உள்ளன.

மாநகராட்சி மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் அதிகளவில் நடக்கிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தை போன்று, கோவை மாநகராட்சியில் ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலி மருத்துவமனை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து டாக்டர்கள் குழு, கேரளா சென்று ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலி மருத்துவமனைகளை பார்வையிட்டு வந்துள்ளனர். அதன் அடிப்படையில், கோவை மாநகராட்சியில் விரைவில் ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலியை குணமாக்கும் மருத்துவமனை துவங்கப்படவுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இன்றைய சூழலில், 40 வயதை கடந்தவர்களில் 50 சதவீதம் பேர் எலும்பு மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை மாநகராட்சியில் ஆயுர்வேத முறைப்படி எலும்பு மற்றும் மூட்டுவலி மருத்துவமனை துவங்கப்பட உள்ளது.

இதுபோன்ற ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலி சிகிச்சை மருத்துவமனை, தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் இல்லை. இந்த ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறையால், பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.

எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுவலிகள் வருவதை தடுக்கும். ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்க 45 நிமிடங்கள் ஆகும். அதனால், தினமும் 10 நபர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.

ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலி மருத்துவமனை துவங்க, கட்டட வசதி மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு 35 லட்சம் ரூபாயும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவை வாங்க 4 லட்சம் ரூபாயும், மருந்து வகைகள் வாங்க ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாயும், மருத்துவர் மற்றும் பணியாளர் சம்பளத்துக்கு ஆண்டுக்கு ஆறு லட்சம் ரூபாயும் செலவிடப்படுகிறது.

முதல் ஆண்டில் மொத்தம் 55 லட்சம் ரூபாயும், அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் ரூபாயும் செலவாகும் என, உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை மட்டுமே இருக்கும்.

ஆயுர்வேத எண்ணெய் மற்றும் மருந்துகள் கொண்டு எலும்பு, மூட்டுவலி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். மாமன்ற அனுமதி பெறப்பட்டு, மாநிலத்தில் முதல் முறையாக, கோவையில் ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலிக்கான மருத்துவமனை துவங்கப்படும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.