Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

190 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடம்

Print PDF

தினமலர்              30.08.2013

190 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடம்

சேலம்: சேலம் மாநகரப் பகுதியில், முதல் தளத்துக்கு மட்டும் அனுமதியை வாங்கி விட்டு, இரண்டு, மூன்று என, மாடிக்கு மேல் மாடி கட்டிய உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக, சாலை பாதுகாப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மகரபூஷணம் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., செல்வராஜ், போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாநகர பஸ்களில், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளதாக, பத்திரிகைகள் சுட்டி காட்டியிருந்தன. அதனடிப்படையில், போக்குவரத்து கழகம் மற்றும் போலீஸ் துறை சார்பில், மாணவர்களிடையே படிக்கட்டு பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்களும், அவ்வாறான தனியார் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குரங்குச்சாவடி அருகில், தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். அவற்றை அகற்றுவதற்கு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொத்தம், மூன்று பேர் மட்டும் செல்லும் ஆட்டோவில், கூடுதலாக பலகைகள் அமைத்து, அதிகப்படியான நபர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர்கள் மீது, 3,621 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீருடைய அணியாத டிரைவர் மீது, 953 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதியதாக வணிக நோக்குடன் கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்கள், மாநகராட்சியிடம் முதல் தளத்துக்கு மட்டும் அனுமதி பெற்று விட்டு, மூன்று, நான்கு மாடி வரை கட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில், 190 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 411 பேர் விபத்தில் இறந்துள்ளனர், இந்த ஆண்டில், 359 பேர் மட்டுமே இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது. மோட்டார் வாகன வழக்குகள் மூலம், 1.59 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலையை சீரமைக்கவும், மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கூட்டத்தில், அதிகாரிகள் தெரிவித்தனர்.