Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை இருப்பு வைக்கும் குடோன்களுக்கு "சீல்' வைக்க முடிவு

Print PDF

தினமலர்            31.08.2013

தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை இருப்பு வைக்கும் குடோன்களுக்கு "சீல்' வைக்க முடிவு


கோவை:கோவையில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை இருப்பு வைக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு "சீல்' வைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சி எல்லைக்குள் 40 மைக்கரான் தடிமனுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறது. கடைகள், குடோன்களில் கண்துடைப்புக்காக பாலித்தீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அதன்பின், பாலித்தீன் பயன்பாட்டுக்கு "கடிவாளம்' போடுவதில்லை. இதனால், பாலித்தீன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.பெட்டிக்கடை, மளிகை கடை, டீக்கடை, பேக்கரி, டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் பாலித்தீன் பொருட்கள் பயன்பாடு அதிகமுள்ளது. மாற்று உபயோக பொருட்கள் இல்லாததால், பொதுமக்களும் பாலித்தீன் பொருட்களை தடையை மீறி பயன்படுத்துகின்றனர். பாலித்தீன் கவர்கள், கப், தட்டுகள், டம்ளர்கள், மேஜை விரிப்புகள் பயன்படுத்தப்பட்ட பிறகு தெருக்களில் வீசப்படுகின்றன. இதனால், பார்க்கும் இடமெல்லாம் பாலித்தீன் கழிவு நிறைந்துள்ளது. காற்றில் பறக்கும் பாலித்தீன் கவர்கள், சாக்கடைகளை ஆக்கிரமித்து, கழிவுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்துகின்றன.

நிலப்பரப்பு முழுவதும் பாலித்தீன் போர்வையாக படர்ந்துள்ளதால், இயற்கை சூழலுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.இக்கழிவுகள் சாக்கடை மட்டுமின்றி, குப்பைத் தொட்டிகள் முழுவதும் ஆக்கிரமிப்பு அதிகமுள்ளது. கோவை மாநகரத்தில் தினமும் 850 திடக்கழிவு ஏற்படுகிறது. இதில், 30 டன் பாலித்தீன் கழிவு ஏற்படுகிறது என்ற புள்ளி விபரம் அதிர்ச்சி அளிக்கிறது.பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபடவும், பாலித்தீன் கழிவுகளை உட்கொள்ளும் கால்நடைகள் இறந்து விடவும் வழிவகுக்கிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி துணை கமிஷனர் சிவராசு கூறுகையில், ""சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 மற்றும் பாலித்தீன் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011ன் படி 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை மற்றும் உபயோகப்படுத்துதலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.இதை மீறி பாலித்தீன் பொருட்கள் தயாரிப்பு, இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீதும் மற்றும் உபயோகிப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பாலித்தீன் விற்பனை செய்தால் அவற்றை பறிமுதல் செய்து 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பாலித்தீன் தடிமனை அளவிட ஐந்து காலிபர் கருவிகள் உள்ளன.

வார்டுக்கு ஒன்று வீதம் 100 கருவிகள் வாங்கப்படும். பாலித்தீன் இருப்பு வைக்கும் குடோன், சில்லரை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குடோனுக்கு "சீல்' வைக்கப்படும்,'' என்றார்.மின்சாரம் தயாரிக்கலாம்!மாநகராட்சி துணை கமிஷனர் சிவராசு கூறுகையில், ""மாநகராட்சி குப்பை கிடங்கில் பாலித்தீன் கழிவுகளை தனியாக பிரிக்கும் பணிகளை துரிதப்படுத்தவும், அவற்றை ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தும்போது, பாலித்தீன் கழிவுகளை பயன்படுத்தலாம். கழிவுகளை எரியூட்டும்போது, இரண்டு சதவீதம் தார் போன்று திரவமாக கிடைக்கும். இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது,'' என்றார்.