Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இறைச்சி கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு

Print PDF

தினகரன்              03.09.2013

இறைச்சி கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு

பொள்ளாச்சி: நகரில் இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள், அதிகாரிகள் கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சப்கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜெகடே தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகரில் மார்க்கெட் ரோடு, நேதாஜி ரோடு, நியூஸ்கீம் ரோடு, பல்லடம் ரோடு, கோட்டூர்ரோடு, திருநீலர்கண்டர் வீதி உள்ளிட்ட பல இடங்களில் ஆடு, கோழி, மாடு மற்றும் பன்றி இறைச்சி கடைகள் என மொத்தம் 87 உரிமம் பெற்ற கடைகள் உள்ளன.

இதில், பெரும்பாலான கடைகளில் திறந்த வெளியிலேயே இறைச்சிகளை தொங்க விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோயில், பள்ளிக்கூடங்கள் அருகேயே இறைச்சி கடைகள் அமைந்துள்ளன. இறைச்சி கடைகளில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரம் சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்த கடைகளை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து இறைச்சிக்கடைகள் எவ்வாறு அமைய வேண்டும், அதற்குண்டான விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சப்கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

சப்கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜெகடே தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், கோவை உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ அலுவலர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், சப்கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜெகடே கூறுகையில்,‘நகராட்சிக்குபட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகள் திறந்த வெளியிலேயே அமைந்துள்ளதாகவும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுகிறது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், மாட்டு இறைச்சி கடைகளை ஒருங்கே அமைக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனினும் தற்போது, இறைச்சி வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை அறிவுறுத்தப்படுகிறது. இதை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இறைச்சி கடைகள் திறந்த வெளியில் இல்லாமல் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட வேண்டும். இறைச்சி தொங்கவிட துருபிடிக்கும் இரும்பை பயன்படுத்தாமல், ஸ்டென்லஸ் ஸ்டீல் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக இறைச்சி கடை வைத்திருப்பவர்கள் தடையில்லா சான்று பெற வேண்டும். அனுமதியின்றி இறைச்சி கடை வைக்க கூடாது. நகராட்சி எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். இறைச்சி வியாபாரிகளுக்கு விடுக்கப்படும் விதிமுறைகளை கடைபிடித்து, 3 வாரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.