Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் இணைப்பு பணிகள் துவக்கம்! பிளம்பர்கள் 44 பேருக்கு உரிமம்

Print PDF

தினமலர்               05.09.2013

குடிநீர் இணைப்பு பணிகள் துவக்கம்! பிளம்பர்கள் 44 பேருக்கு உரிமம்

கோவை: கோவை மாநகராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, பிளம்பர்கள் 44 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்தாண்டு மழை பெய்யாமல் சிறுவாணி அணையில் வறட்சி ஏற்பட்டு, தினமும் 25 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைத்தது. இதனால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதால், சிறுவாணி குடிநீர் செல்லும் பகுதிகளுக்கு பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல், புதிதாக குடிநீர் இணைப்பு கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது, சிறுவாணி திட்டத்தில் தினமும் 85 மில்லியன் லிட்டரும், பில்லூர் -1 திட்டத்தில் 65 மில்லியன் லிட்டரும், பில்லூர் -2 திட்டத்தில் 40 மில்லியன் லிட்டரும், ஆழியாறு திட்டத்தில் 7.8 மில்லியன் லிட்டரும் குடிநீர் கிடைக்கிறது.

பழைய மாநகராட்சி பகுதிகளில் தேவைக்கேற்ப குடிநீர் கிடைப்பதால்,புதிதாக குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என, மேயர் அறிவித்தார். மேலும், குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ள பிளம்பர்கள் தேர்வு செய்யும் பணியும் நடந்தது. மாநகராட்சியில் ஏற்கனவே பதிவு செய்துள்ள பிளம்பர்கள், புதிதாக விண்ணப்பித்த பிளம்பர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. மாநகராட்சியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், 44 பிளம்பர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டுள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "குடிநீர் இணைப்பு கேட்டுள்ள, 3400 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. பழைய மாநகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணி துவங்கியுள்ளது. உரிமம் பெற்றுள்ள பிளம்பர்கள் மூலம் குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர் இணைப்பு பெறுவதில் சிரமம் ஏற்பட்டாலும், பிளம்பர்கள் முரண்பாடான தகவல்கள் தெரிவித்தால் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் செய்யலாம்' என்றனர்.