Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ43 கோடியில் திட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேரடியாக குடிநீர் வினியோகம் அதிகாரிகள் ஆய்வு

Print PDF
தினகரன்             19.09.2013

ரூ43 கோடியில் திட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேரடியாக குடிநீர் வினியோகம் அதிகாரிகள் ஆய்வு


தாம்பரம், : ரூ43 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேரடியாக பம்மல் நகராட்சிக்கு குடிநீர் வினியோக திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பம்மல் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் தோல் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தினமும் வேலைக்கு வந்து செல்கின்றனர். பம்மல் நகராட்சி சார்பில், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் குடிநீர் பெற்று வாரத்துக்கு ஒருமுறை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்களின் 50 சதவீத தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உலக வங்கி நிதி திட்டத்தின் கீழ் ரூ43 கோடி மதிப்பில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேரடியாக பம்மல் நகராட்சிக்கு குடிநீர் வினியோக திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு அதிகாரிகள் நேற்று குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமையவுள்ள இடங்களை ஆய்வு செய்தனர்.

அதில் சங்கர்நகர் 1வது வார்டு 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு, 8வது வார்டு இந்துஸ்தான் லீவர் காலனி 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு, 17வது வார்டு கலாதரன் தெருவில் 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு, 20வது வார்டு வீராசாமி தெருவில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்டுவதற்கு  தேர்வு செய்த இடங்களை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், நாள் ஒன்றுக்கு 100 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து, தினமும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றனர்.