Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி "ரிசர்வ் சைட்' கணக்கெடுப்பு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தீவிரம்

Print PDF

தினமலர்           19.09.2013

மாநகராட்சி "ரிசர்வ் சைட்' கணக்கெடுப்பு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தீவிரம்

கோவை:மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை சர்வே செய்து கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான லே-அவுட்கள் உள்ளன. பெரும்பாலான பகுதிகளில் பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், அரசியல் தலையீடுகளால், ஆக்கிரமிப்புகள் தொடர்கதையாக உள்ளது. ராமநாதபுரம் 80 அடி ரோட்டில், பொது ஒதுக்கீட்டு இடத்தை ஆக்கிரமித்திருந்த தனபால் என்பவர், மேயர் மீது புகார் தெரிவித்தார். இதையடுத்து, கோர்ட் தீர்ப்பு வந்ததும், ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக, ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி பொது நிலங்கள் கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. நகரமைப்பு அலுவலர் வரதராஜன் தலைமையில், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சர்வேயர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டிலும் ஆக்கிரமிப்பு நிலங்களை சர்வே செய்து பட்டியலிட்டு வருகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி இடம் என்பதற்கு போதுமான ஆவணங்கள் இருந்தாலும், இடங்களை மீட்பதில் சிக்கல் உள்ளது. மாவட்ட கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுகளில் பல்வேறு நிலைகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், ஆக்கிரமிப்புகளை காலி செய்து, இடத்தை மீட்க முடிவதில்லை.

வழக்கில் இருப்பவை, வழக்கு இல்லாதவை, காலி இடம் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டடம் கட்டியிருப்பது பற்றி சர்வே நடக்கிறது. ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கட்டடம் கட்டியிருந்தால், அந்த இடத்தை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மத்திய மண்டலத்தில் ராமநாதபுரம் 80 அடி ரோடு, அலமு நகர் ரிசர்வ் சைட் மீட்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் ஜி.ஆர்.ஜி., நகர், கேத்தாரி லே-அவுட் ரிசர்வ் சைட் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடவள்ளியில், 11 ரிசர்வ் சைட்களை ஆய்வு செய்ததில், ஆறு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த இடங்களை உடனடியாக மீட்க ஆவணங்கள் தயார் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு வார்டிலும் ரிசர்வ் சைட் சர்வே செய்து கணக்கெடுக்கப்படுகிறது. மத்திய மண்டலத்தில் புதிதாக லே-அவுட்கள் அமைக்கவில்லை. அதனால், மற்ற மண்டலத்திலுள்ள 80 வார்டுகளில் சர்வே எடுக்க முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மூன்று மாதங்களில் இப்பணி முடிந்ததும், ஆக்கிரமிப்பு நிலங்கள் அதிரடியாக அகற்றப்படும். இவ்வாறு, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.