Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கௌண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி            26.09.2013 

கௌண்டன்யா ஆற்றில்  ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

குடியாத்தம் கௌன்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

 ஆந்திர மாநிலம் புங்கனூரில் தொடங்கி, குடியாத்தம் அருகேயுள்ள பசுமாத்தூர் வரை சுமார் 60 கி.மீ. நீளம் உள்ளது கௌன்டன்யா ஆறு. குடியாத்தம், கே.வி. குப்பம் பகுதிகளின் முக்கிய நீராதாரமாக இந்த ஆறு விளங்குகிறது. இதன் குறுக்கே தமிழக, ஆந்திர மாநிலங்களின் எல்லையான மோர்தானா கிராமத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து, சுமார் 25 கிமீ தொலைவில் பசுமாத்தூர் அருகே இந்த ஆறு, பாலாற்றில் கலக்கிறது.

 கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆற்றில் வெள்ளம் வராததால், குடியாத்தம் நகரில் ஆற்றின் இரு பக்கங்களையும் ஆக்கிரமித்து சுமார் 900 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிராமப் பகுதியில், அருகில் நிலம் வைத்துள்ளவர்கள், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நீதிமன்றங்களின் உத்தரவையடுத்து, முதல் கட்டமாக நகர எல்லைக்குள், போடிப்பேட்டையில் தொடங்கி, சுண்ணாம்புபேட்டை வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறையினர் முடிவெடுத்தனர்.

 இதையடுத்து, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற் பொறியாளர் ஜி. முரளிதரன், உதவிப் பொறியாளர் பி. கோபி, பணி ஆய்வாளர் பி. சிவாஜி, வட்டாட்சியர் எம். கஜேந்திரன், நகராட்சி ஆணையர் ஜி. உமாமகேஸ்வரி, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், நகரமைப்பு ஆய்வாளர் ஆர். நளினாதேவி, நகர அளவர் (சர்வேயர்) திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர்கள் மோகன், அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் தரணி உள்ளிட்டோர் தாழையாத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை அளவீடு செய்யும் பணியைத் தொடங்கினர்.

 இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும், நோட்டீஸ் பெற்றுக் கொண்ட 21 நாள்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்கள், தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும் பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.