Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை இணைப்பு பெறாவிட்டால் அபராதம்: திருச்சி மாநகராட்சி முடிவுக்கு மாமன்றம் ஒப்புதல்

Print PDF

தினமலர்           27.09.2013

பாதாள சாக்கடை இணைப்பு பெறாவிட்டால் அபராதம்: திருச்சி மாநகராட்சி முடிவுக்கு மாமன்றம் ஒப்புதல்

திருச்சி: "பாதாள சாக்கடை இணைப்பு பெறாவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும்' என்ற திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் திட்டத்திற்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரம் மற்றும் சாதாரண கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்தார். கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மனித கழிவுகள் நேரடியாக மழைநீர் வடிகாலில் விடுவதால், அதை தடுக்கும் வகையில், பாதாள சாக்கடை கட்டமைப்பு வசதி உள்ள பகுதிகளில், இணைப்பு பெறாவிட்டால் ஐந்தாயிரம் ரூபாய அபராதம் விதிக்க வேண்டும் என்ற பொருள் விவாதத்திற்கு வந்தது.

இதன் மீது தி.மு.க., கவுன்சிலர்கள் பேசுகையில், ""ஏற்கனவே உள்ள இணைப்புகளுக்கு ஏற்ப பாதாள சாக்கடை திட்டத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் அளவு சிறியதாக இருப்பதால், ஆங்காங்கே அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவு நீர் ஓடுகிறது. அடைப்பை சரி செய்ய நான்கு நாட்கள் வரை ஆகிறது. இந்த சமயத்தில் வீடுகளில் இருந்து கழிவு நீரை மழை நீர் வடிகாலில் தான் விட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கழிவுகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், அபராதம் தொகை அதிகமாக உள்ளது. மேலும், இணைப்பு பெறுவதற்கான காலகெடுவை அதிகரிக்க வேண்டும்,'' என்றனர்.

இதற்கு கமிஷனர் பதில் கூறுகையில்,"" மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதால் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் தான் மழைநீர் வடிகாலில் கழிவுகளை விடாமல் தடுக்கவும், செப்டிக் டேங்க்களில் இருந்தும் நேரடியாக விடாமல் தடுக்கவும் தான், பாதாள சாக்கடை இணைப்பு பெற வலியுறுத்தப்படுகிறது. அபராதம் என்பது அச்சுறுத்துவதற்காகவே, தவிர அதில் தீவிரம் காட்டப்பட மாட்டாது. பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை, தினமும் வழக்கமாக மேற்கொள்ளும் வகையில் 50 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்படவுள்ளது,'' என்றார்.

நகர பொறியாளர் சந்திரன் பேசுகையில், ""பாதாள சாக்கடை திட்டத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் அளவு சிறியதாக இருப்பதால் உடைப்புகள் ஏற்படுகிறது. இந்த பகுதிகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும் போது, உடைப்பு ஏற்படும் பகுதிகளில் டூப்ளிகேட் குழாய்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது,'' என்றார்.

இதையடுத்து, அபராதத் தொகை மூன்றாயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் இதை அமல்படுத்த வேண்டும் என திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேறியது.

பாதாள சாக்கடை வசதி உள்ள மற்றும் இல்லாத பகுதிகளில் செப்டிக் டேங்குகளில் இருந்து மழைநீர் வடிகாலில் கழிவுகளை விட்டால் முதல் முறை 250 ரூபாய் அபராதமும், அதன் பிறகு ஆயிரம் ரூபாய் அபராதமும் சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த 61 முதல் 65வது வார்டுகள் மற்றும் ஏற்கனவே உள்ள வார்டுகளில் என மொத்தம் 198 இடங்களில் குடிநீர் வழங்க தனியார் லாரிகளை வாடகைக்கு அமர்த்தும் தீர்மானத்திற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து புதிதாக இணைந்த வார்டுகளுக்கு மட்டும் தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.