Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகங்களில் சப்பாத்தி இயந்திரங்கள் அக்டோபர் 15-க்குள் பொருத்த உத்தரவு

Print PDF

தினமணி             27.09.2013

அம்மா உணவகங்களில் சப்பாத்தி இயந்திரங்கள் அக்டோபர் 15-க்குள் பொருத்த உத்தரவு

சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பொருத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒரு அம்மா உணவகம் என்ற ரீதியில் 200 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் குறைந்த விலையில் இட்லி, பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பார் சாதம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாலை வேளைகளில் குறைந்த விலையில் சப்பாத்தி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனடிப்படையில் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை கொள்முதல் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மண்டலத்துக்கு ஒன்று என 15 இயந்திரங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஒரு இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 3,000 சப்பாத்திகள் தயாரிக்க முடியும்.

இதன் ஒரு பகுதியாக கோபாலபுரத்தில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் ஒரு மணிநேரத்தில் 200 சப்பாத்திகள் தயாரிக்கும் வகையிலான இயந்திரம் நிறுவப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.செப்டம்பர் மாதத்துக்குள் சப்பாத்திகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயந்திரங்கள் பொருத்த தாமதமானதால் வழங்கப்படவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை பொருத்த கால தாமதம் ஆகியுள்ளது. எனவே, இயந்திரங்களை கொள்முதல் செய்து உடனடியாக நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் 15 மண்டலங்களிலும் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை நிறுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.