Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"சேலத்தில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட190 கட்டடங்களுக்கு நோட்டீஸ்'

Print PDF

தினமணி             27.09.2013

"சேலத்தில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட190 கட்டடங்களுக்கு நோட்டீஸ்'

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட 190 கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.மகரபூஷணம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சேலம் மாநகரில் புதியதாக வணிகக் கட்டடங்கள் கட்ட மாநகராட்சியிடம் தரைத் தளம், முதல் தளத்திற்கு மட்டும் அனுமதி பெற்று விட்டு 3, 4 மாடி கட்டுகின்றனர்.  வாகனங்கள் நிறுத்த இடம் இருப்பதில்லை. மேலும், குடியிருப்பு பகுதிகளில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்கப்படுமா என்று சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் கேட்டதற்கு,  190 கட்டடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டதாகவும், அனுமதிக்கு மாறுதலான வணிகக் கட்டடங்கள் குறித்த முதல்கட்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி கட்டட உரிமையாளர்களுக்கு 30 நாள்கள் அவகாச நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

இதில், குரங்குச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல், மண் கொட்டியும், லாரிகளை இணைப்புச் சாலையில் வரிசையாக நிறுத்திக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்திருப்பதால், பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளதாக, சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் கேட்டதற்கு, தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநர் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

இதே போல, அழகாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள பல்பொருள் அங்காடி அருகிலும், ராஜரத்தினம் பூங்காவிலும், அழகாபுரம் திரெüபதி அம்மன் கோயில் அருகிலும், டி.வி.எஸ் எதிர் சாலையில் உள்ள மயானம் அருகிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஆய்வு செய்து, போக்குவரத்து உதவி ஆணையாளர் அறிக்கை அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

சேலம் மாநகரில் உள்ள ஷேர் ஆட்டோக்களில் கூடுதலாகப் பயணிகளை ஏற்றிக் செல்வதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக உறுப்பினர் கேட்டதற்கு,  இதுகுறித்து நடப்பாண்டில் 3,964 வழக்குகள் பதிவு செய்து, உடனடி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் உதவி ஆணையர் தெரிவித்தார்.

கூட்டத்தில், மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு, மாவட்டக் கண்காணிப்பாளர் சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வராஜ் மற்றும் சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.