Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்போரூர் பேரூராட்சியில் 3 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

Print PDF

தமிழ் முரசு         01.10.2013

திருப்போரூர் பேரூராட்சியில் 3 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான 3 கோடி மதிப்பு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணகப்பட்டு கிராமத்தில் இள்ளலூர் சாலையில் அரசுக்கு   சொந்தமான 97 சென்ட் ஏரி புறம்போக்கு நிலம் உள்ளது. ஏரிக்கரையை ஒட்டிய இந்த நிலத்தை விவசாயிகள், தங்களின் விளை பொருட்களை எடுத்துவரும் பாதையாக பயன்படுத்தினர். இந்த நிலத்தை அவ்வப்போது சிலர் ஆக்கிரமித்துவந்தனர். வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கல் நட்டுவைத்தனர்.

பின் அந்த இடத்தில் வீடுகள் கட்டி மின் இணைப்பு பெற்று குடியேறிவிட்டனர். இது பற்றி அறிந்ததும் நேற்று திருப்போரூர், கண்ணகப்பட்டு மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்து மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி மோகன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் போலீசாருடன் அங்கு விரைந்தனர். திருப்போரூர் துணை வட்டாட்சியர் வெங்கட்ரமணன், கிராம நிர்வாக அலுவலர் வேலாயுதம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். அரசு பதிவேடுகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில், அந்த இடம் ஏரிக்கரை புறம்போக்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு  இடத்தில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த வேலிகளை அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ.3 கோடி என தெரிகிறது.