Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதிகளில் தொழில் வரி25 சதவீதம் உயர்த்த திட்டம்

Print PDF

தினகரன்             01.10.2013

மாநகராட்சி பகுதிகளில் தொழில் வரி25 சதவீதம் உயர்த்த திட்டம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் 25 சதவீதம் தொழில் வரியை உயர்த்த திட்டமிடப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை கவுன்சிலர் ராதாமணி பாரதி வெளிநடப்பு செய்தார்.

ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இதில் 15வது தீர்மானமாக தொழில் வரியை உயர்த்துவது குறித்து தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. அதில் மாநகராட்சியில் கடந்த 1.10.2008ல் தொழில்வரி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்வரியை திருத்தியமைக்க வேண்டும் என்று உள்ளது. தற்போது 5 ஆண்டு முடிவடைந்த நிலையில் தொழில்வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அரையாண்டிற்கு 21 ஆயிரம் ரூபாய் வரை தொழில் வரி இல்லை. 21,001 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை 94 ரூபாயும், 30 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை 235 ரூபாயும், 45 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை 469 ரூபாயும், 60 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை 704 ரூபாயும், 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 938 ரூபாயும் தொழில் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே விதிக்கப்பட்ட தொழில் வரியில் இருந்து குறைந்த பட்சம் 25 சதவீதத்திற்கு குறையாமலும், அதிகபட்சம் 35 சதவீதத்திற்கு மிகாமலும் வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டு மாமன்ற ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசுகையில், 201314ம்ஆண்டில் மாநகராட்சிக்கு தொழில் வரி மூலமாக 1.83 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

25 சதவீதம் உயர்த்துவதால் ஆண்டுக்கு 46 லட்ச ரூபாய் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்சம் 25 சதவீதம் வரியை உயர்த்த வேண்டும் என்று மாநகராட்சி சட்டத்தில் உள்ளது என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி 27வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் ராதாமணி பாரதி பேசும்போது, ஈரோட்டில் ஜவுளி மற்றும் அதனை சார்ந்த தொழில் நலிவடைந்துள்ள நிலையில் தற்போது தொழில்வரி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும். வணிக பகுதியான எனது வார்டில் கடந்த 2 ஆண்டுகளில் எவ்விதமான வளர்ச்சி திட்டப்பணியும் செய்யவில்லை. எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காத நிலையில் தொழில் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன் என்றார்.

மாநகராட்சி கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்த கவுன்சிலர் ராதாமணிபாரதி சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி வந்து விவாதத்தில் கலந்து கொண்டார். மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கூறுகையில், பெரும்பாலான கவுன்சிலர்கள் 10 சதவீதம் வரை வரியை உயர்த்தலாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.