Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராஜபாளையத்தில் 2-வது குடிநீர் தேக்கத்துக்கு தடுப்பணை கட்ட இடம் ஆய்வு

Print PDF

தினமணி           03.10.2013

ராஜபாளையத்தில் 2-வது குடிநீர் தேக்கத்துக்கு  தடுப்பணை கட்ட இடம் ஆய்வு

ராஜபாளையம் நகராட்சி 2-வது புதிய குடிநீர் தேக்கத்திற்கு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டுவர வனப்பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டும் பகுதியை ராஜபாளையம் நகர் மன்றத்தலைவர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் அபிவிருத்திக்காக தற்போதுள்ள 6-வது மைல் குடிநீர்தேக்கம் அருகே புதிய குடிநீர்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தேக்கத்திற்கு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர மலட்டாற்றில் தடுப்பணை கட்ட ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி நகர்மன்றம் சார்பில் அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் வனப்பகுதியில் மலட்டாற்றில் தடுப்பணை கட்ட அனுமதி வழங்கியது.

பெங்களூரு மண்டல வனத்துறையும் தற்போது அனுமதி வழங்கியதை அடுத்து மலட்டாற்றில் தடுப்பணை கட்டும் இடம் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

ராஜபாளையம் நகர் மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி, விருதுநகர்மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பி.பி. செல்வசுப்பிரமணியராஜா, நகராட்சி ஆணையாளர் ராமசாமி, பொறியாளர் நடராஜன், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் முத்துமாரியப்பன், புகழேந்தி, ராஜபாளையம் வனச்சரக அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள் மலட்டாற்றுப் பகுதிக்கு புதன்கிழமை நேரடியாகச் சென்று தடுப்பணை கட்டும் இடத்தை ஆய்வு செய்து இடம் தேர்வு செய்தனர்.

மேலும் தடுப்பணையில் இருந்து நீர்தேக்கம் வரை 450 மீட்டர் நீளம் குழாய் பதிக்கும் இடத்தையும் தேர்வு செய்தனர். இது குறித்து ராஜபாளையம் நகர் மன்றத்தலைவர் பி.எஸ். தனலட்சுமி கூறும் போது, ராஜபாளையம் நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க இரண்டாவது புதிய குடிநீர்தேக்கம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 23 கோடியில் குடிநீர்தேக்கம் அமைக்கப்பட்டது போக மீதி உள்ள ரூ. 9 கோடிஉள்ளது. இந்த நிதியைப்பயன்படுத்தி வனப்பகுதியில் தடுப்பணை, தண்ணீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்படும் என தெரிவித்தார்.