Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலும் இரண்டு மேம்பாலங்கள் பராமரிப்புக்கு ஒப்பந்தம்

Print PDF

தினமலர்             03.10.2013

மேலும் இரண்டு மேம்பாலங்கள் பராமரிப்புக்கு ஒப்பந்தம்

சென்னை:சென்னையில், ஏழு மேம்பாலங்களை பராமரிக்க முதல்கட்டமாக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு மேம்பால பராமரிப்பு பணிக்கு மாநகராட்சி தற்போது ஒப்பந்தம் கோரியுள்ளது.

சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள மேம்பாலங்களை பராமரித்து, புதுப்பொலிவுடன் வைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, சென்னையில் அதிகமாக சிதிலமடைந்த மேம்பாலமான ஆற்காடு சாலை கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கு, 4 கோடி ரூபாய்க்கு மதிப்பீடுகள் தயாரிக்கப் பட்டு உள்ளன.

அதே போல், கோட்டூர்புரம் அடையாறு பாலம் உட்பட ஏழு மேம்பாலங்களுக்கு, 7 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகளை செய்ய மாநகராட்சி முதல்கட்டமாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது. தற்போது டி.டி.கே., சாலை மேம்பாலம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மேம்பால பராமரிப்பு பணிகளுக்கும் மாநகராட்சி ஒப்பந்தம் கோரியுள்ளது.

டி.டி.கே., சாலை மேம்பாலம், 45 லட்சம் ரூபாய் செலவிலும், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மேம்பாலம், 43 லட்சம் ரூபாய் செலவிலும் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளன.

இன்னும் சில மேம்பாலங்களுக்கு சேத மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பணிகளுக்கு அடுத்தகட்டமாக ஒப்பந்தம் கோரப்பட உள்ளன.

இதற்கிடையே, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவரில் உள்ள இரும்பு கைப்பிடிகளில் எக்கு முலாம் பூசப்பட்ட துருபிடிக்காத தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மேம்பாலங்களில் முதல்முறையாக இந்த முயற்சி செய்யப்படுகிறது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேம்பாலங்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் பராமரிப்பு பணிகள் முடிந்து, புதிய வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் மாறும்' என்றார்.