Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகராட்சி பிறப்புச் சான்றிதழ் பிரிவில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி           04.10.2013

மதுரை மாநகராட்சி பிறப்புச் சான்றிதழ் பிரிவில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை

மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பிரிவில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைத் தொடர்ந்து தனியார் ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், நிரந்தர ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.

   இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை கூறியது: மாநகராட்சி சுகாதாரத் துறையில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பிரிவில் அமைச்சர், எம்எல்ஏ பெயரில் முறைகேடாக இறப்புச் சான்றிதழ் வழங்கியது துரதிஷ்டவசமானது. இந்த முறைகேடுகள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அதேசமயம், இப்பிரிவில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான கணினி மென்பொருள் மற்றும் ரகசியக் குறியீட்டை முறைகேடாகப் பயன்படுத்தி போலியாக சான்றிதழ் வழங்கிய விவகாரம் குறித்து, நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. இக்குழுவின் முதல்கட்ட அறிக்கையை ஏற்கெனவே சமர்ப்பித்து விட்டனர். தொடர்ந்து ஆய்வு நடத்தி வரும் குழுவினர் விரைவில் முறைகேடுகள் நடைபெற்று வந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, நிவர்த்தி செய்யும் ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தரவுள்ளனர்.

   இந்த அறிக்கை பெறப்பட்டவுடன் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கும் பிரிவில் புதிய கணினி மென்பொருளை உருவாக்கி, முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் ரகசிய குறியீடுகள் மூலம் இயக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இப்பிரிவு மட்டுமின்றி மாநகராட்சியில் வருவாய்த் துறை, கணக்குப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் உள்ள தனியார் கணினி ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   இப்பிரிவுகளில் மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முதல்கட்டமாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   மாநகராட்சி மைய அலுவலகத்தில் தேவையற்றவர்களின் நடமாட்டத்தை ஒழிக்க மேயர் பாலம், மைய அலுவலகத்தின் முக்கிய நுழைவு வாயில் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள பாதை ஆகியவை வியாழக்கிழமை முதல் அடைக்கப்பட்டுள்ளன.

    இனி, தகவல் மையம் வழியாக மட்டுமே பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மைய அலுவலகத்துக்குள் வரமுடியும். இதற்கு ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.

   மேலும், மேயர் அலுவலகம், ஆணையர் அலுவலகம், தகவல் மைய நுழைவு வாயில், முதனமை நகரமைப்புப் பிரிவு, பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்கும் பிரிவு, ஜேஎன்ஆர்எம்யு அலுவலகம், நகரப்பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும் என்றார்.