Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் நுழைய "டோக்கன்'

Print PDF
தினமலர்            07.10.2013

மாநகராட்சியில் நுழைய "டோக்கன்'


மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு வருவோருக்கு "டோக்கன்' வழங்கும் முறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அமைச்சர் செல்லூர் ராஜூ, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., அண்ணாத்துரை, உயிருடன் இருக்கும் போது, இறந்ததாக மாநகராட்சியின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக, தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ஜீவன் ரமேஷ், இடைத்தரகர் பத்மநாபன், ஒப்பந்த பணியாளர் பரங்கிரிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் பெற்றவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வழங்கியவர்கள் மீது, இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மாநகராட்சி அலுவலகம் வருவோரை, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கியது.

உள்ளே நுழைபவர்களின் விபரங்களை பதிவு செய்த பின், அவர்களுக்கு "டோக்கன்' வழங்கப்படுகிறது. அதைக் கொண்டு, சம்மந்தப்பட்ட பிரிவை நாடலாம். இது வரவேற்கக்கூடிய நடவடிக்கை என்றாலும், பாரபட்சம் இல்லாமல் கடைபிடிக்க வேண்டும். நேற்று கட்சியினர் பலர், "டோக்கன்' இல்லாமலேயே, மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதை சரிசெய்ய, கமிஷனர் நந்தகோபால் முன்வரவேண்டும்.
நாகராஜ் குழப்பம் தீர்ந்தது:

அமைச்சருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய புகாரை விசாரித்த "சைபர் கிரைம்' போலீசார், விண்ணப்பித்தவரின் பெயரை "நாகராஜன்' என கண்டறிந்தனர். மாநகராட்சியின் தினக்கூலி பணியாளர் நாகராஜன் விண்ணப்பித்திருக்கலாம் என, "சைபர் கிரைம்' போலீசார் சந்தேகிப்பதாக, தகவல் வெளியானது. பின் விசாரணையில், நாகராஜன் என்ற பெயரை போலியாக பயன்படுத்தி, சான்றிதழ் பெற்றுள்ள விபரம் தெரியவந்துள்ளது. (பணியாளர் நாகராஜனுக்கு இதில் தொடர்பில்லை). அதன்பிறகே மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.