Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழக்கரையில் பாலிதீன் பைகளை ஒழிக்க மீண்டும் நடவடிக்கை: நகராட்சித் தலைவர்

Print PDF

தினமணி          08.10.2013

கீழக்கரையில் பாலிதீன் பைகளை ஒழிக்க மீண்டும் நடவடிக்கை: நகராட்சித் தலைவர்

கீழக்கரையில் பாலிதீன் பைகளைஒழிக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹாஜாமைதீன்,நகராட்சி அலுவலர் நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் திண்ணாயிரமூர்த்தி, பணி மேற்பார்வையாளர் அறிவழகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ஜெயபிரகாஷ்: நகராட்சியில் குறிப்பிட்ட 2 நபர்கள் மட்டுமே பெரும்பாலான டெண்டர் பணிகளை எடுக்கின்றனர். எடுத்த பணிகளை முடிக்கவே இல்லை. இந்த நிலையில் புதிய பணிகளும் அவர்களுக்கே வழங்கப்படுகிறது. இதுமிகவும் தவறானது.

தலைவர்: பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் சட்ட விதிமுறையின்படி டெண்டர் பணிகளை எடுக்கின்றனர். குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை நிறைவேற்ற வேண்டும். இன்னும் 2 மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின்னரும் முடிக்காவிட்டால் டெண்டர் பணியை ரத்துசெய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயபிரகாஷ்: ரூ.55 லட்சம் வரை பணிகளை எடுத்து முடிக்காத 2 ஒப்பந்ததாரர்கள் மீது தடைவிதிக்க வேண்டும். ரூ.1 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிக்காக இதுவரை ரூ.95 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 50 சதவீதம் கூட பணிகள் முடிவடையவில்லை. நகராட்சியின் வரவுசெலவு அறிக்கையை கூட்டத்தில் தாக்கல் செய்யவேண்டும்.

துணைத்தலைவர்: நகராட்சி தலைவரின் சார்பில் நிர்வாகத்தில் வேறுயாரும் தலையிடக் கூடாது.

தலைவர்: மன்றத்தில் இல்லாதவர்களை பற்றி துணைத்தலைவர் பேசுவது கண்டிக்கத்தக்கது. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கீழக்கரை நகர்முழுவதும் ரூ.5 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். விநியோக குழாய்களும் மாற்றப்படும். இந்தப் பணிகள் முடிந்ததும் மேலும் நிதி ஒதுக்கீடு பெற்று தோண்டப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்படும். பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க மீண்டும் அதிரடி சோதனை நடத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் செய்யது கருணைபாவா,சாகுல்ஹமீது, அஜ்மல்கான், ரபியுதீன், முகைதீன் காதர், சித்திக்அலி, அன்வர்அலி, ஹாஜாநஜ்முதீன், அரூஸியா, மீனாள், ஜரினா, மீராபானு, தாஜின்அலிமா ஆகியோர் கலந்து கொண்டனர்.