Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேனியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவக்கப்படும்: நகர்மன்றக் கூட்டத்தில் அறிவிப்பு

Print PDF

தினமணி           15.10.2013

தேனியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவக்கப்படும்: நகர்மன்றக் கூட்டத்தில் அறிவிப்பு

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவங்கும் என்று, தேனி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 இந்தக் கூட்டத்துக்கு, துணைத் தலைவர் காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  திட்டச் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். புதிய பஸ் நிலையப் பகுதியில் திட்டச் சாலை வரைபடம் மாற்றம் குறித்து எழுந்துள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். திட்டச் சாலை மற்றும் அணுகு சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும். பழைய ஸ்ரீராம் திரையரங்கு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 4 ஆவது வார்டு பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சுடுகாட்டு இடத்தை மாற்றுப் பயன்பாட்டுக்கு விடவேண்டும். மீறு சமுத்திரம் கண்மாயை சீரமைக்க வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

 நகரின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும், பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.

 நகர்மன்றத் தலைவரின் பதில்: திட்டச் சாலை ஆக்கிரமிப்பை அகற்றி பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாரபட்சம், தயவுதாட்சண்யமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விரைவில் துவங்க உள்ளது.

 மீறு சமுத்திரம் கண்மாயை சீரமைக்கவும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் ரூ. 8 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கண்மாயை நகராட்சி நிர்வாகம் வசம் ஓப்படைக்க பொதுப் பணித்துறையிடம் அனுமதி பெறும் பணி நடைபெற்று வருகிறது.

 நகராட்சி சார்பில் புதிதாக எரிவாயு தகனமேடை திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆவது வார்டில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சுடுகாட்டை மாற்றுப் பயன்பாட்டுக்கு விடுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படுóம்.

 புதிய பஸ் நிலையப் பகுதியில் திட்டச் சாலை வரைபடம் மாற்றப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பழைய வரைபடத்தை பெற்று, அதன் அடிப்படையில் இப்பிரச்னையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளும்போது, சில இடங்களில் குடிநீர் பகிர்மானக் குழாய்கள் சேதமடைந்து விடுகின்றன. சேதமடைந்த குழாய்களை உடனுக்குடன் பழுது நீக்கி குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.