Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளுக்கும் பொதுநிதியில் இருந்து ரூ. 6 கோடியில் பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை

Print PDF

தினத்தந்தி            21.10.2013

மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளுக்கும் பொதுநிதியில் இருந்து ரூ. 6 கோடியில் பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை

வேலூர் மாநகராட்சி 1–வது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளுக்கும் பொதுநிதியில் இருந்து ரூ.6 கோடியில் பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மண்டல குழு கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தனர்.

மண்டல குழுக்கூட்டம்

வேலூர் மாநகராட்சி 1–வது மண்டல குழுக்கூட்டம் தாராபடவேடு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல குழுத்தலைவர் சுனில்குமார் தலைமை தாங்கினார். மண்டல அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

அன்பு: என்னுடைய வார்டில் பல இடங்களில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அடிக்கடி திருட்டு சம்பவம் நடக்கிறது. தெருவிளக்கு எரிய வைக்க நடவடிகை எடுக்கப்படுமா?

மண்டல தலைவர் சுனில்குமார்: தெருவிளக்குகளை பராமரிக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை என கணக்கெடுத்து வருகின்றனர். அந்தபணி முடிந்தவுடன் விளக்குகள் எரிய செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன்குமார்: என்னுடைய வார்டில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. நகராட்சியில் குரங்கு பிடிக்கிறார்கள். மாநகராட்சியில் ஏன் குரங்கு பிடிப்பதில்லை?

தலைவர் சுனில்குமார்: குரங்குகளை பிடிக்க வனத்துறையினருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரம் ஒதுக்கி தரும்போது குரங்குகள் பிடிக்கப்படும்.

ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்

விஜயலட்சுமி: என்னுடைய வார்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையே, ஏன்? மண்டல அலுவலர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பு: மழைகாலத்தில் வீடுகளில் நத்தைகள் வந்துவிடுகிறது. கழிவுநீர் கால்வாய் கட்டினால் நத்தைகள் வராது.

மண்டல அலுவலர்: கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன்குமார்: என்னுடைய வார்டில் கல்லூரி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். மேலும் கொசுத்தொல்லை இருப்பதால் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மண்டல அலுவலர்: ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொசுமருந்து அடிக்கப்படும்.

செல்வி ரவி: என்னுடைய வார்டில் குப்பைகள் அதிகமாக உள்ளது. தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. டிராக்டரை அனுப்பினால் உடனுக்குடன் குப்பைகள் அகற்ற முடியும். மண்டல அலுவலர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

எஸ்.ராஜா: என்னுடைய வார்டில் ரெயில்வே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அதற்கு கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும். இதுவரை நடவடிக்கை இல்லை. சித்தூர் பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதற்கு நிரந்திர தீர்வு காணவேண்டும்.

மண்டல அலுவலர்: சித்தூர் பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

ரமேஷ்: காங்கேயநல்லூர் மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும். நீண்ட நாட்களாக கூறிவருகிறேன். டெண்டர் விட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தலைவர் சுணில்குமார்: கழிவுநீர் கால்வாய் கட்ட அதிக நிதி தேவைப்படும். திட்ட மதிப்பீட்டை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர். திட்ட மதிப்பீடு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.