Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் 211 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

Print PDF

தினத்தந்தி             25.10.2013

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் 211 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

கோவையில் 211 பட்டாசு கடைகளுக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. தீத்தடுப்பு உள்ளிட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

211 பட்டாசு கடைகள்

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு கோவை நகர போலீஸ், தீயணைப்புத்துறை, மாநகராட்சி ஆகியவற்றின் பாதுகாப்பு ஆலோசனைகளின் அடிப்படையில் தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு கோவையில் பட்டாசு கடை நடத்த 211 கடைகளுக்கு கோவை நகர போலீஸ் அனுமதி அளித்துள்ளது. துணை கமிஷனர் ராமர் நேற்று மாலை இதற்கான அனுமதிகளை பட்டாசு வியாபாரிகளிடம் வழங்கினார்.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

பட்டாசு கடைகளை மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கான்கிரீட் கட்டிடங்களில் இரும்பு, அலுமினிய தகடுகள் பொருத்தப்பட்ட பகுதிகளிலும் பாதுகாப்பான முறையில் கடைகள் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பெயிண்ட், மண்எண்ணை, பெட்ரோல், டீசல், தீப்பட்டி, கியாஸ் சிலிண்டர், கியாஸ் லைட்டர் ஆகியவற்றை அங்கு வைத்திருக்க கூடாது. தீத்தடுப்பு பொருட்களான மணல், தண்ணீர் மற்றும் சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போதிய அளவு காற்றோட்ட வசதிகள் செய்து இருக்க வேண்டும்.

குழந்தை தொழிலாளர்கள்

பட்டாசு கடைகளில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பட்டாசு கடைகளை பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இன்றி நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கோவை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.