Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தடையை மீறி விற்பனை செய்த பாலித்தீன் பைகள் பறிமுதல் மாநகராட்சி–மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி             25.10.2013

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தடையை மீறி விற்பனை செய்த பாலித்தீன் பைகள் பறிமுதல் மாநகராட்சி–மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடையை மீறி விற்பனை செய்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதிகாரிகள் சோதனை

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தடையை மீறி ஈரோட்டில் பல கடைகளிலும் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் இணைந்து நேற்று ஈரோட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு காவிரி ரோடு அருகே உள்ள கந்தசாமி வீதியில் ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை கடைக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி தலைமையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நல்லசாமி, இக்பால், இஸ்மாயில், தங்கராஜ், நாச்சிமுத்து, மாசுக்கட்டுப்பாட்டுவாரிய சுற்றுச்சூழல் அதிகாரி ராமராஜ், உதவிப்பொறியாளர் குணசீலன் ஆகியோர் சென்றனர்.

அவர்கள் அங்கிருந்த பாலித்தீன் பைகளை எடுத்து மைக்ரான் மீட்டர் மூலம் சோதனை செய்தனர். அதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த சில பாலித்தீன் பை வகைகள் 40 மைக்ரான் அளவுக்கு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.

பாலித்தீன் பைகள் பறிமுதல்

ஒரே கடையில் இருந்து சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு வெண்டிபாளையம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.

இதுபற்றி மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி கூறும்போது, ‘ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாலித்தீன் பைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் தொடர்ந்து சோதனை நடைபெறும். 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். உற்பத்தி செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

உஷாரான கடைக்காரர்கள்

அதிகாரிகள் சோதனை நடத்துவதை அறிந்த கொங்கலம்மன் கோவில் வீதி உள்பட பல்வேறு வீதிகளில் உள்ள பிளாஸ்டிக் கடை உரிமையாளர்கள் உடனே உஷாராகி தங்கள் கடைகளை மூடினார்கள்.

இதுபோல் ஒரு சில கடைகளில் அங்குள்ள குடோன்களில் 40 மைக்ரான் அளவுக்கும் குறைவான பாலித்தீன் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை மறைத்து வைத்தனர். இதனால் அனைத்து கடைகளையும் அதிகாரிகள் சோதனையிடாமல் திரும்பி சென்றனர்.