Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கடைகளில் அதிகாரிகள் குழு ரெய்டு

Print PDF

தினகரன்          25.10.2013

மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கடைகளில் அதிகாரிகள் குழு ரெய்டு

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் நேற்று அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் வெளியானதால் பிளாஸ்டிக் கடைக்காரர்கள் கடைகளை அவசர, அவசரமாக பூட்டி விட்டுச் சென்று விட்டனர்.

ஈரோடு மாநகராட்சி சார்பில் 40 மைக்ரான் அளவிற்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், கலர் பூசப்பட்ட பைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் நேற்று கடைகளில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

  கொங்காளம்மன் கோவில் வீதி, மார்க்கெட் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கடைக்காரர்களுக்கு உடனடியாக தகவல்களை அளித்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் பெரும்பாலான பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டன.

இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ், உதவி பொறியாளர்கள் குணசீலன், முரளி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் தங்கராஜ், இஸ்மாயில், நல்லசாமி, நாச்சிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்த கடைகளை தேடினார்கள். கந்தசாமி வீதியில் திறந்திருந்த ஒரு பிளாஸ்டிக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் கலர் பைகளை பறிமுதல் செய்தனர்.