Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாடுகளை சாலையில் திரியவிட்டால் அபராதம்

Print PDF

தினமணி             02.11.2013

மாடுகளை சாலையில் திரியவிட்டால் அபராதம்

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாலாஜாவில் நடந்த நகராட்சி கூட்டத்தில் அதன் தலைவர் வேதகிரி தெரிவித்தார்.

வாலாஜா நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் வேதகிரி தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம்:

சரஸ்வதி மணி (காங்கிரஸ்): வாலாஜா நகரில் சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த வாரம் பஜார் வீதியில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தள்ளியதில் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் பலரும் காயம் அடைந்துள்ளனர் என்றார். இதே கருத்தை அதிமுகவை சேர்ந்த சையத் உஸ்மானும் வலியுறுத்தினார்.

இர்பான் (திமுக): வாலாஜா பஜார் வீதியில் பிளாட்பார கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுவதோடு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தலைவர் வேதகிரி: தீபாவளி பண்டிகை முடிந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் சாலைகளில் மாடுகளை திரியவிடும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் முரளி, அசோகன், ஆனந்தன், ரவி, ரங்கநாதன், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். துணைத்தலைவர் மூர்த்தி, ஆணையாளர் (பொறுப்பு) ஆனந்தஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.