Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகள் அகற்றம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி            07.11.2013

பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகள் அகற்றம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

 சென்னை தியாகராய நகர், பாண்டி பஜார்–உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.

பாண்டி பஜார்–உஸ்மான் சாலை

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள பாண்டி பஜார்–உஸ்மான் சாலையில் 500–க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. ஏழை–பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்புமக்களும், இப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகளும் பாண்டிபஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்வது வழக்கம்.

ஐகோர்ட்டில் வழக்கு

ஒரு பக்கம் நன்மை இருந்தாலும், இந்த நடைபாதை கடைகளினால் தியாகராயநகர் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களும், வாகனஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள் என்றும் கூறி கடந்த 2001–ம் ஆண்டு ‘டிராபிக்’ ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும் நடைபாதைக் கடைகள் தங்கள் கடையை பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பாக மறைத்து நடைபாதை வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி வழக்கு தொடுத்தனர். வழக்கைதொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

வணிக வளாகம்

அந்த கமிட்டி நடைபாதை வியாபாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், நடைபாதை வியாபாரிகள் தங்களுக்கு தனியாக வணிக வளாகம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி, முந்தைய தி.மு.க. ஆட்சியில், மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து ரூ.4 கோடி 30 லட்சம் செலவில் பாண்டி பஜார் லட்சுமி காந்தா தெரு அருகில் லிப்ட் வசதி, கழிப்பறை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய 3 அடுக்கு வணிக வளாகம் 2010–ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

 இந்த நிலையில் அக்டோபர் 20–ந்தேதிக்குள் பாண்டிபஜார்–உஸ்மான் சாலை வியாபாரிகள் இடங்களை காலி செய்துவிட்டு, சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கடைகள் அகற்றம்

நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து நடைபாதை வியாபாரிகள், வணிக வளாகத்திற்கு கடைகளை மாற்றும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் தீபாவளி பண்டிகை நாட்களில் விற்பனையை முடித்து விட்டு செல்வதாக கூறி அவகாசம் கேட்டனர். இதைத் தொடர்ந்து நவம்பர் 5–ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

தற்போது தீபாவளி வியாபாரம் முடிந்து விட்ட நிலையில் நேற்று பாண்டி பஜார்–உஸ்மான் சாலையில் இருந்த நடைபாதை கடைகளை, கடை உரிமையாளர்களும், மாநகராட்சி ஊழியர்களும் அகற்றினர். இதுகுறித்து நடைபாதை வியாபாரிகள் கூறியதாவது:–

வியாபாரிகள் கருத்து

எங்களது கோரிக்கைகளை ஏற்று தீபாவளி பண்டிகை வரை எங்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிய முதல்–அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தற்போது நாங்களாகவே கடைகளை அகற்றி வருகிறோம்.

எங்களில் சிலர் சென்னை மாநகராட்சி வணிக வளாக கடைகளில் தங்கள் கடைகளை அமைத்து விட்டனர். சிலர் இன்னும் ஓரிரு நாட்களில் கடைகளை அமைக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.