Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அகற்றம்

Print PDF

மாலை மலர்           08.11.2013

பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அகற்றம்
 
பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அகற்றம்: வணிக வளாகத்தில் கடைகள் தயாராகாததால் பொதுமக்கள் தவிப்பு
சென்னை, நவ.8- சென்னை தியாகராய நகர், தியாகராய சாலை, பாண்டிபஜார், உஸ்மான் சாலை, சிங்காரவேலன் சாலை, சிவபிரகாசம் சாலை ஆகிய பகுதிகளில் நடைபாதை கடைகள் அதிகம் உள்ளன. இந்த நடைபாதை கடைகளில் பல தரப்பட்ட மக்களும் வந்து தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த நடைபாதை கடைகளினால் அந்த பகுதிகள் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் செல்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு கடந்த 2001-ம் ஆண்டு டிராபிக் ராமசாமி என்பவர் பொது நலவழக்கு தொடர்ந்தார். அதேபோல் பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும் கடைகளுக்கு பின்புறம் உள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் மறைக்கப்படுகின்றன. இதனால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி அவர்களும் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் தலைமையில் தனி கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி நடைபாதை வியாபாரிகளிடம் நேரடி ஆலோசனை வழங்கியது. அதில் நடைபாதை வியாபாரிகள் எங்களுக்கென்று தனி வணிக வளாகம் அமைத்து தாருங்கள் என்று கூறி இருந்தனர்.

அதன்படி, கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவில் 3 அடுக்கு கொண்ட வணிக வளாகம் கட்டிமுடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 20-ந்தேதி நடைபாதை வியாபாரிகள் தங்கள் நடைபாதை கடைகளை காலிசெய்து விட்டு வணிக வளாகத்தில் தங்கள் கடைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நவம்பர் 2-ந்தேதி தீபாவளி என்பதால் அதுவரை நாங்கள் எங்கள் நடைபாதை கடைகளில் வியாபாரம் செய்கிறோம். தீபாவளி முடிந்ததும் நாங்களாகவே கடைகளை அகற்றி விடுகிறோம் என்று கூறினர்.

அதன்படி அவர்கள் கோரிக்கையை அரசு ஏற்று அவர்களுக்கு நவம்பர் 5-ந்தேதி வரை அனுமதி வழங்கியது. தற்போது 5-ந்தேதி முடிவடைந்த நிலையில் நடைபாதை கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து நேற்று முன்தினம் இரவு முதல் தங்கள் கடைகளை அகற்றினர். தற்போது அவர்கள் வணிக வளாகத்தில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கடைகளை மும்முரமாக அமைத்து வருகின்றனர்.

இதுகுறித்து வணிக வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நடைபாதை கடைகள் சங்கத்தின் தலைவர்கள் கூறியதாவது:-

பாண்டிபஜார், உஸ்மான் சாலை, தியாகராய நகர், தியாகராய சாலை, சிவபிரகாசம் சாலை, டாக்டர் நாயர் சாலை, பிள்ளையார் கோவில் தெரு, சிவஞானம் சாலை, ஸ்ரீனிவாசா சாலை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து நடைபாதை கடைகளையும் தற்போது நாங்களாகவே அகற்றி விட்டோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வணிக வளாகத்தில் தற்போது ஒவ்வொரு நடைபாதை வியாபாரிகளும் கடைகளை அமைக்கின்றனர்.

இந்த வணிக வளாகம் 3 அடுக்குகளை கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் 175 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தளத்தில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகளாக பிரித்து ஏ பிரிவில் 59 கடைகளும், பி பிரிவில் 57 கடைகளும், சி பிரிவில் 59 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தளத்தில் 9 கழிவறைகளும், 3 லிப்ட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதே போல் மூன்று தளத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் காய்கறி கடைகள் வர உள்ளன. பாண்டிபஜார் பேன்சி ஸ்டோர், ஜவுளிக்கடைக்கு மவுசு அதிகம் என்பதால் இன்று காலை முதல் இந்த வணிக வளாகத்தில் கடைகள் வந்து விட்டதா? என்று பொதுமக்கள் நிறைய பேர் வந்து பார்த்து விட்டு சென்றனர்.

தற்போது வணிக வளாகத்தில் வெளியே பூக்கடைக்காரர்கள் தங்கள் அன்றாட வியாபாரத்தை தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டு இருக்கின்றனர். இங்கு அனைத்து கடைகளின் பணி முடிய இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும். தற்சமயம் அனைத்து நடைபாதை வியாபாரிகளும் தங்கள் கடைகளை காலி செய்துவிட்டதால் இங்கு வணிக வளாகத்தில் கடைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு விட்டதால் நேற்று எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாண்டிபஜார் பகுதி களை இழந்து காணப்பட்டது. மேலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் வாகனங்கள் அனைத்தும் சீராக சென்றன. போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை.