Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரில் சாக்கடை கலந்திருந்தால் பொறியாளர் மீது நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை

Print PDF

தினமணி        09.11.2013

குடிநீரில் சாக்கடை கலந்திருந்தால் பொறியாளர் மீது நடவடிக்கை:  மேயர் எச்சரிக்கை

மாநகராட்சிப் பகுதியில் எங்காவது குடிநீரில் சாக்கடை கலந்து விநியோகம் செய்யப்பட்டால், அப்பகுதி பொறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா எச்சரித்துள்ளார்.

  மதுரை மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், வெள்ளிக்கிழமை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தலைமை வகித்து, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா பேசியது: மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் விநியோகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும் குடிநீர் விநியோகம் தொடர்பான அலுவலர்கள், பொறியாளர்கள் தொலைபேசி எண்களையும், குடிநீர் விநியோகம் செய்யும் கால அட்டவணைகளையும் பொதுமக்கள் பார்வையில்  படுமாறு, தகவல் பலகையில் ஒட்டி வைக்கவேண்டும்.

  மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மயானங்களில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும். சில பகுதிகளில் குடிநீரில் சாக்கடை கலப்பதாக புகார்கள் வருகின்றன. இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, குடிநீரில் சாக்கடை கலக்கும் இடங்களைக் கண்டறிந்து, உடனடியாக சரிசெய்ய வேண்டும்.  இனிவரும் காலங்களில் குடிநீரில் சாக்கடை கலப்பதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பொறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

  இதில், ஆணையர் (பொறுப்பு) லீலா, நகரப் பொறியாளர் அ. மதுரம், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையர்கள் ஆ. தேவதாஸ், ரெகோபெயாம், சின்னம்மாள், கல்வி அலுவலர் மதியழகராஜ், பிஆர்ஓ சித்திரவேல் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.