Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு அகற்றம் ரோடு அமைக்க உத்தரவு

Print PDF

தினமலர்         18.11.2013 

ஆக்கிரமிப்பு அகற்றம் ரோடு அமைக்க உத்தரவு

மதுரை:மதுரை மூன்றுமாவடி- அய்யர்பங்களா ரோட்டின் வலதுபுறம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில், புதிதாக ரோடு அமைக்கும் வகையில், மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

வக்கீல் சுபாஷ்பாபு தாக்கல் செய்த பொதுநல மனு:

மூன்றுமாவடி- அய்யர்பங்களா ரோட்டின் இருபுறமும் சிலர், ஆக்கிரமித்திருந்தனர். பொதுப்பணித்துறை கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருந்தனர். இதனால் ரோட்டில் நெரிசல், விபத்து ஏற்படுகிறது; "ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்' என, ஏற்கனவே ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.

நீதிபதிகள் உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினர். அங்கு கட்டட இடிபாடுகள், வெட்டப்பட்ட மரங்கள் குவிந்துகிடக்கின்றன. அவற்றை அகற்றி, நெரிசலை குறைக்க புதிதாக ரோடு அமைக்க வேண்டும்.

"கால்வாயை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்' என, மதுரை மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு (நீர்வள ஆதாரம்) மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் நிஷாபானு ஆஜரானார். நீதிபதிகள்,"மனுவை, மாநகராட்சி கமிஷனர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என, உத்தரவிட்டனர்.