Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆனைமலை குப்பைக்கிடங்கை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வு

Print PDF

தினமலர்         18.11.2013 

ஆனைமலை குப்பைக்கிடங்கை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வு

ஆனைமலை:ஆனைமலையில், மக்களுக்கு சுகாதார கேடு விளைவித்து வந்த குப்பைக்கிடங்கை, மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு செய்தார்.

ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு, முப்பதாயிரக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாசாணியம்மன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

பேரூராட்சியில் வசிப்போர் மற்றும் வெளியூர் மக்கள் பயன்படுத்தி குப்பைகளாக கழிக்கப்படும் பொருட்கள், தினமும் டன் கணக்கில் சேகரிக்கப்படுகிறது.

இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் டிராக்டர் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் சேகரிக்கப்பட்டு, 16வது வார்டில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. ஆரம்பத்தில் காடாக இருந்த இப்பகுதி, தற்போது குடியிருப்பு நிறைந்த பகுதியாக மாறி விட்டது.

இதனால், சின்னப்பம்பாளையம் -ஆனைமலை ரோட்டில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பேப்பர்கள், காற்றில் பறந்து அருகில் உள்ள காடுகள் மற்றும் வீடுகளில் விழுகின்றன.

எனவே, குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜகோபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜகோபால் கூறுகையில்,"குப்பைகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக், பீங்கான் பொருட்கள் என தரம் பிரிக்கப்படும். பிளாஸ்டிக் குப்பைகள் அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்டு, ரோடுகள் போட பயன்படுத்தப்படும். மக்கும் குப்பைகள் உரமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு தரப்படும். குப்பைக்கிடங்கில் இருந்து குப்பைகளை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

ஆனைமலை பேரூராட்சிக்கு, குப்பை அரைக்கும் இயந்திரம் வந்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஆய்வின் போது, ஆனைமலை பேரூராட்சித்தலைவர் சாந்தலிங்க குமார், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.