Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மின் சிக்கனத்தை கடைபிடிக்க புதிய திட்டம்...தயார்! தெரு விளக்குகள் "எல்.இ.டி.'களாக மாறுகிறது

Print PDF

தினமலர்          19.11.2013

மின் சிக்கனத்தை கடைபிடிக்க புதிய திட்டம்...தயார்! தெரு விளக்குகள் "எல்.இ.டி.'களாக மாறுகிறது

மின் சிக்கனத்தை கடைபிடிக்க புதுச்சேரியில் 14 ஆயிரம் சாலையோர விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

புதுச்சேரி நகர சாலைகளில் இரவு நேரங்களில் வெளிச்சத்தை கொடுக்க சாலையோர மின்கம்பங்களில் சோடியம் மெர்குரி மெட்டல் ஹாலைடு டியூப் லைட் உள்ளிட்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

நகரப் பகுதியில் நகராட்சி பொதுப்பணித்துறை சாலையில் மொத்தம் 7210 விளக்குகள் உள்ளது. இவற்றிற்காக மாதந்தோறும் 12 லட்சம் ரூபாயும் ஆண்டுக்கு 1.44 கோடி ரூபாய் மின்கட்டணமாக செலுத்தப்படுகிறது. இதுபோல் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சாலையில் 7403 சாலையோர விளக்குகள் உள்ளது. இவற்றிற்காக மாதந்தோறும் 12.3 லட்ச ரூபாயும் ஆண்டுக்கு 1.48 கோடியும் மின் கட்டணமாக செலுத்தப்படுகிறது.

சோடியம் மெர்குரி உள்ளிட்ட விளக்குகள் பல நூறு யூனிட் மின்சாரத்தை உறிஞ்சுகிறது. காற்று மழை உள்ளிட்ட பிரச்னையால் பழுதாகும் மின் விளக்குகள் எந்த இடத்தில் பழுது என்பதை கண்டுபிடித்து சரி செய்ய பல நாட்கள் ஆகிறது.

மின் சிக்கனத்தை கடைபிடிக்க மாற்று ஏற்பாடாகவும். விளக்குகள் பழுதாவதை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்யவும் "ஆற்றல் திறன்மிகு தெரு விளக்குகள் திட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி அதிக ஒளி வெளிச்சத்தை உமிழும் வகையிலான எல்.இ.டி. விளக்குகளை சாலையோர மின்கம்பங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்துறை புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பொதுப்பணித்துறை மரபுசாரா எரிசக்தி முகமை இணைந்து இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது. திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சித்துறை அமைச்சரை தலைவராக கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும் உள்ளாட்சித்துறை செயலர் மின்துறை செயலர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் எரிசக்தி முகமை திட்ட இயக்குநர் உழவர்கரை மற்றும் நகராட்சி ஆணையர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படும்போது மெர்குரி சோடியம் டியூப் லைட் வெளியிடும் அதே அளவு ஒளி வெளிச்சத்தை வெளியிடும் வகையில் அமைக்கவும் மொத்தமுள்ள 14 ஆயிரம் விளக்குகளும் ஒரு கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கும் வகையில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து மின் விளக்குகளை "ஆன்' மற்றும் "ஆப்' செய்ய முடியும்.

மேலும் மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை அதிக ஒளி வெளிச்சம் தரும் வகையிலும் அதன் பின்பு விளக்கின் ஒளி வெளிச்சம் 40 சதவீதமாக குறைத்து குறைந்த வெளிச்சத்தை தரும் வகையிலும் நள்ளிரவில் ஒரு மணிநேரம் மட்டும் அதிக வெளிச்சம் தரும் வகையில் புரோகிராம் செய்யப்பட உள்ளது.

இது மட்டுமின்றி 14 ஆயிரம் விளக்குகளில் எந்த இடத்தில் பழுது ஏற்பட்டாலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்டுபிடித்து சரிசெய்ய வசதி செய்யப்படும். இத்திட்டத்திற்கான சாத்திய கூறுகளை கண்டறிந்து முழு திட்டம் தயாரிக்க "எனர்ஜி எபிசன்ட் சர்வீஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு விரைவில் உயிரூட்டம் கொடுத்து பணிகளை விரைந்து துவக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.