Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் மாற்றம் மாநகராட்சி புதிய ஆணையர் நடவடிக்கை

Print PDF

தினகரன்            22.11.2013

மார்க்கெட் கண்காணிப்பாளர்கள்  மாற்றம் மாநகராட்சி புதிய ஆணையர் நடவடிக்கை

மதுரை, :  மாநகராட்சி புதிய ஆணையர் தனது முதல் நடவடிக்கையாக ரிங்ரோடு, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட்டுகளை கவனித்து வந்த மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் 4 பேரையும் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.

மதுரை மாநகராட்சி புதிய ஆணையராக கிரண் குராலா நேற்று முன்தினம் பொறுப்பேற்றதும், “நேர்மையான நிர்வாகமாக இருக்கும்“ என்றார். இதனால் மாநகராட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி முதல் நடவடிக்கையாக 4 மண்டலங்களின் மார்க்கெட் கண்காணிப்பாளர்களையும் அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சியில் மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் என ஒரு பணியிடமே கிடையாது. இந்த பணியை இளநிலை உதவியாளர் கிரேடு ஊழியர்கள் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் வரியில்லா இனங்கள் என்று சொல்லப்படும் வருவாய் தரும் இனங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ரிங்ரோட்டிலுள்ள வாகன சுங்க சாவடி, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் மார்க்கெட் மற்றும் அனைத்து வகை மார்க்கெட், மாநகராட்சி கடைகளுக்கு வாடகை வசூலித்தல் போன்ற முக்கிய பொறுப்புகள் இவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இது, மாநகராட்சிக்கு வருவாய் தேடித் தரும் பணிகளில் முக்கியமானதாகும். அனுமதி பெறாத கடையாக இருந்தாலும் இவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது.

இதுவரை மார்க்கெட் கண்காணிப்பாளர் பணியில் சையதுமைதீன் (மேற்கு மண்டலம்), தேவ தாஸ் (வடக்கு மண்டலம்), பாலசந்திரன் (கிழக்கு மண்டலம்), செல்வராஜ் (தெற்கு மண்டலம்) இருந்தனர். இவர்கள் தங்களது பொறுப்புகளை, அந்த மண்டலத்திலுள்ள உதவி வருவாய் அலுவலரிடம் (ஏஆர்ஓ) உடனடியாக ஒப்படைக்கும்படி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 4 பேரும் ஏற்கனவே பணியாற்றி வந்த இளநிலை உதவியாளராக மீண்டும் திரும்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட் கண்காணிப்பாளர் பணியை உருவாக்கி, அந்த பணி கீழ் நிலை ஊழியர்களிடம்  ஒப்படைக்கப்பட்டு இருந்ததால், உடனடியாக அதில் மாற்றம் செய்து புதிய ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மேலும் சிறப்பான நிர்வாக சீர்திருத்தங்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க, மேயர் ராஜன்செல்லப்பாவும் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி மன்ற கூட்டம் முடிந்ததும் மாலையில் முதல் நிலை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆணையர் ஆய்வு நடத்தினார். தவறுகளை தடுக்க அதிகாரிகள், ஊழியர்கள் அளவில் மேலும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது, இதனால் ஏற்கனவே புகாரில் சிக்கிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வசூல் வேட்டை

மதுரை நகர் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள், மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றுவதற்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அகற்றப்படவில்லை. இதுபோன்ற பெட்டிக்கடைகள் பெருகியதற்கு, பணம் வசூலித்து கண்டுகொள்ளாமல் இருந்த 4 சந்தை கண்காணிப்பாளர்களே காரணம் என கூறப்படுகிறது. மேலும் இவர்கள் சாலை ஓரங்களில் உள்ள இளநீர் கடை, கரும்பு ஜுஸ் கடை, வடை கடைகளிலும், அனுமதி இல்லாமல் வைத்திருந்ததாக கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார் உள்ளது.