Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.320.39 கோடி ரூபாய்: தமிழக அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிதி

Print PDF

தினமலர்               25.11.2013

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.320.39 கோடி ரூபாய்: தமிழக அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிதி

திருப்பூர் : "திருப்பூர் மாவட்டத்தில், நான்கு நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில், 320.39 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,' என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளிலும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த நிதி யாண்டில், உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டது; 56.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அங்கீகாரம் பெறப்பட்டது. அதன்பின், 38.93 கோடி ரூபாய்க்கு தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அனைத்து மாநகராட்சிகளிலும் நடைமுறையில் இருப்பதைபோல், அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உடுமலை நகராட்சியில் பணிகள் நடந்து வருவதால், அடுத்த கட்டமாக, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், தாராபுரம் நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளன.

அவிநாசி, திருமுருகன்பூண்டி உட்பட மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோல், திருமூர்த்தி அணை தளி வாய்க்காலை நீராதாரமாக கொண்டு, குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள், உடுமலையில் மூன்று ஊராட்சிகள் என 26 ஊராட்சிகளுக்காக, 54.70 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளும் துவங்கியுள்ளன.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நீங்கலாக, மற்ற நான்கு நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 320.39 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரித்து, அரசு அங்கீகாரத்திற்காக கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது."இதேபோல், சில குடிநீர் திட்டங்களுக்கும் நிர்வாக அனுமதி கோரி கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,' என்றனர்.